கோவை: கோவையில் IT ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதைப் பொருளான மெத்தபெட்டமைன் போதைப் பொருளை விற்பனை செய்த கும்பலை காவல் துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தில் புறநகர்ப் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், ஐடி இளைஞர்கள் உள்ளிட்டோரை குறிவைத்து போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தடுக்கும் வகையில் கோவையில் புறநகர்ப் பகுதிகள் மற்றும் வாடகைக்கு தங்கியிருக்கும் மாணவர்கள், இளைஞர்களின் அறைகள், விடுதிகள் போன்றவற்றில் போலீஸார் அடிக்கடி அதிரடி சோதனை மேற்கொண்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனாலும், கோவையில் போதைப் பொருள் கும்பலின் அட்டூழியம் குறைந்தபாடில்லை. இதனால், பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் இளைஞர்கள் ஈடுபடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கோவைக்கு ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் போதை மாத்திரைகளை கடத்தி விற்பனை செய்து வந்த கும்பலைச் சேர்ந்த நான்கு பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அந்த கும்பலிடம் இருந்து 1,556 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை மாநகர காவல் துறையினருக்கு போதைப் பொருள் விற்பனை குறித்து ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல் துணை ஆணையர் உதயகுமார் தலைமையில், துணை ஆணையர், தனிப்படை போலீஸார், கோவை மாநகர மதுவிலக்கு பிரிவு போலீஸார் இணைந்து நேற்று சுமார் மாலை கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்டிற்குள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, பேருந்து நிலையத்திற்குள் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகில் வைத்து மெத்தபெட்டமைன் எனும் போதைப் பொருளை விற்பனை செய்து வந்த கோவை, ராமநாதபுரம் புளியகுளம் அம்மன் குளத்தைச் சேர்ந்த கோபிநாத் (27) மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மிதலாஜ் ,விக்னேஷ், அஜித், ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து மொத்தம் சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான 195 கிராம் மெத்தப்பட்டமைன் போதைப் பொருள் மற்றும் பணம் 15,500 ரூபாய், செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் மீது மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர்.பெங்களூரில் இருந்து மொத்தமாக மெத்தபெட்டமைன் போதை பொருளை வாங்கி இங்கு வந்து விற்பனை செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்கள் மீது ஏற்கனவே விசாகப்பட்டினம் மற்றும் கோவையில் கஞ்சா வழக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply