கோவை: கோவை சிங்காநல்லூரில் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தில் அடுத்த மாதம் போக்குவரத்து தொடங்க உள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஒண்டிப்புதூரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்ல பாலம் இல்லாமல் 12 ஆண்டுகாலமாக அவதிப்பட்ட மக்களுக்கு தீர்வு கிடைக்கப் போகிறது. இந்த பாலம் கடந்த 2013ம் ஆண்டு எவ்வளவு சிக்கலை தாண்டி வந்துள்ளது என்பதை பார்ப்போம்.
கோவை மாநகரம் சிங்காநல்லூரை அடுத்த ஒண்டிப்புதூரில் ரயில்வே கிராஸிங் இருக்கிறது. அதாவது ஒண்டிப்புதூரில் இருந்து எஸ்.ஐ.எச்.எஸ். காலனிக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதையடுத்து மேம்பாலம் அமைக்கலாம் என கடந்த 2013-ம் ஆண்டில் அப்போதைய அதிமுக அரசு திட்டமிட்டது. 27 தூண்களுடன் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணியை, மாநில நெடுஞ்சாலைத்துறை தொடங்கியிருந்தது.
ஆனால் ரயில்வே மேம்பாலம் அமைத்தபோது, அணுகுசாலைக்கு போதிய இடம் ஒதுக்காமல், 30 அடி அகலத்துக்கு மேம்பாலம் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுகுறித்து சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இதனால், மேம்பால வேலை பாதியில் நின்றது. பல்வேறு கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவே இல்லை. இந்நிலையில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து, 2021-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அப்போது இந்த மேம்பால பணி மீண்டும் தொடங்கப்பட்டிருந்தது. நில உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி இழப்பீடு வழங்கப்பட்டிருந்தது. இதற்கு 3 கட்டங்களாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இறுதிகட்ட பணிகளுக்காக மேம்பாலம் செல்லும் ஒண்டிப்புதூர் பகுதியில் தடுப்பு சுவர், ஒண்டிப்புதூர் மற்றும் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி செல்லும் வழித்தடத்தின் இருபுறமும் தலா, 75 மீட்டர் நீளத்துக்கு அணுகு சாலை, நடைபாதையுடன் கூடிய வடிகால் அமைப்பது உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. தொடர்ந்து அனைத்து பணிகளும் மும்முரமாக நடந்தது. இதற்கிடையில், குடிநீர் குழாய் மற்றும் மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணிகள் தாமதமாகியது. தற்போது அந்த பணிகள் நடந்து வருகிறது.
மேம்பால பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், “ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்துவிட்டது. இறங்குதளம் அமைப்பது, தடுப்பு சுவர், சர்வீஸ் ரோடு அமைப்பது உள்ளிட்ட பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து அடுத்த மாதம் இறுதியில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது. சர்வீஸ் சாலை உள்ளிட்ட பணிகள் பாக்கி இருந்தாலும் மேம்பாலத்தில் போக்குவரத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது” என தெரிவித்தனர்.
Leave a Reply