3 மாதத்தில் இலவச பட்டா பெற்றவர்கள்.. 2,000 பேர்! இன்னும் 1,000 மனுதாரர்கள் காத்திருப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் வீடில்லாத, 2,000 ஏழைகளுக்கு மூன்றே மாதங்களில், இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இன்னும், 1,000 பேர் விண்ணப்பித்து காத்திருக்கின்றனர்.கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு, இலவச மனைப்பட்டா கேட்டு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மனுக்களின் உண்மை தன்மையை ஆராய்ந்து, கள ஆய்வு மேற்கொண்டு, பட்டா வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறை அதிகாரிகள், மனுக்களின் உண்மை தன்மை ஆராய்ந்து, விசாரணைக்கு உட்படுத்துகின்றனர்.

தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன. நியாயமான மனுக்கள், அடுத்த கட்டத்துக்கு அனுப்பப்படுகின்றன. பல்வேறு படிநிலைகளுக்கு பின், பட்டா வழங்கப்படுகிறது.

ஒரு நபருக்கு ஒரு இலவச பட்டா என்ற அடிப்படையில், பட்டா விண்ணப்பம் மற்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள ஆதார் எண், ரேஷன் கார்டு ஆகியவை தொழில்நுட்ப ரீதியாக ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.ஆதார் அட்டையுடன் பான்கார்டு இணைத்திருந்தால், வருமான உச்சவரம்பை அடைந்திருக்கிறாரா என கண்டறிந்து, அவரது வருவாய் விகிதங்கள் கணக்கீடு செய்யப்படுகிறது. விதிமீறல் இருந்தால், விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது.

இதன்படி, மூன்று மாதத்தில், கோவை மாவட்டத்தில் வால்பாறை நீங்கலாக, பத்து தாலுகாக்களில் மட்டும், 735 பேருக்கு இலவச பட்டா வழங்கப்பட்டுள்ளது.

அதிகபட்சம் மதுக்கரை தாலுகாவில் 219 பேருக்கும், சூலுார் தாலுகாவில் 216 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

மற்ற தாலுகாக்களில் நுாறுக்கும் குறைவாகவே, பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1,426 பேருக்கு பட்டா வழங்க நிர்வாக ரீதியான பணிகள், வேகமாக நடந்து வருகின்றன. 885 பேருக்கு மனை பட்டா வழங்க உத்தரவாகியுள்ளது.

நியாயமான விண்ணப்பங்களுக்கு

மட்டுமே பட்டா: டி.ஆர்.ஓ.

மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா கூறுகையில், ”பட்டா கேட்டு வரும் மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தவும், தணிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளோம். இதற்கென வருவாய்த்துறையில் சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான ஆய்வே இறுதியானது. நியாயமான விண்ணப்பங்களுக்கு மட்டுமே, பட்டா கிடைக்கும் என்கிற சூழலைஏற்படுத்தியுள்ளோம்,” என்றார்.