கோவை : வரும் 2026 சட்டசபை தேர்தலுக்காக, கோவை அ.தி.மு.க., அதிவேகத்தில் தயாராகி வருகிறது. பூத் கமிட்டி கூட்டங்கள், கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, நலம் விசாரித்தல் என, முழுமூச்சாக களப்பணியில் இறங்கி விட்டது அக்கட்சி.வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் ஓராண்டு இருக்கிறது. ஆனால், சில மாதங்களுக்கு முன்பாகவே, தேர்தல் பணிகள் சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். ஆளும் கட்சி, அரசு இயந்திரங்களின் துணையோடு மக்களைச் சந்திக்கத் தொடங்கும்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க., இம்முறை ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் வேகமாக செயல்பட்டு வருகிறது. ஆட்சியைப் பிடிப்பது கடைசி நேர கூட்டணிக் கணக்குகளுக்கு உட்பட்டது என்றாலும், சொந்த வாக்குவங்கியை அதிகம் நம்புகிறது.கட்சியின் அடிமட்ட நிர்வாகிகள்தான், மக்களை நேரடியாக சந்திப்பர் என்பதால், அவர்களை அ.தி.மு.க., தயார்படுத்தி வருகிறது. பூத் கமிட்டிக் கூட்டங்களை நடத்தி வருகிறது.
கோவையைப் பொறுத்தவரை, மாவட்ட அளவிலான பூத் கமிட்டி கூட்டம் முடிந்த நிலையில், தொகுதி வாரியான கூட்டங்கள் நடந்து வருகின்றன. கோவையில் அ.தி.மு.க.,வின் பிரதான முகமாக அறியப்படும் வேலுமணி, ‘பூத் கமிட்டிக் கூட்டங்களில், ‘ஒரு பூத் கமிட்டிக்கு 9 உறுப்பினர்கள்; ஒருவருக்கு 110 வாக்காளர்கள்; அனைத்து வாக்காளர்களையும் சரிபார்க்க வேண்டும், கோவை மாவட்டத்தில், 30 ஆயிரத்து 870 பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளனர்; அனைவரும் சரியாக, திட்டமிட்டு வேலை பார்த்தால், தி.மு.க., மீதான மக்களின் வெறுப்பை, ஓட்டாக அறுவடை செய்யலாம்’ என, புள்ளிவிவரங்களுடன் பேசி, கட்சி நிர்வாகிகளை உற்சாகப்படுத்தி வருகிறார்.
மாவட்ட அளவில் மட்டுமல்லாது, தொகுதி அளவிலும், தொகுதிக்குள், பகுதி அளவிலும் பூத் கமிட்டிக் கூட்டங்களை, அ.தி.மு.க.,வினர் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இம்முறையும் கோவை மாவட்டத்தில், அனைத்து சட்டசபைத் தொகுதிகளையும் வெல்லும் இலக்கோடு திட்டமிட்டு செயலாற்றி வருவதாக, கட்சியினர் தெரிவிக்கின்றனர். அ.தி.மு.க.,வினரின் இந்த வேகம், ஆளும் கட்சியினரை சற்றுத் தடுமாற வைத்திருக்கிறது.
Leave a Reply