24 மணி நேரமும் மது விற்பனை; கோவையில் தாய்மார்கள் கண்ணீர்

தமிழகத்தில் கொலை, கொள்ளை போன்ற சட்டம் – ஒழுங்கு பிரச்னைகள் பெரும்பாலும், மனிதனை அடிமையாக்கும் மது போதையால்தான் நடக்கின்றன என்பது, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக இருந்துவருகிறது.மதியம், 12:00 முதல் இரவு, 10:00 மணி வரை செயல்பட வேண்டிய ‘டாஸ்மாக்’ பார்கள் பல, குற்றவாளிகளுக்கு வசதி செய்து தருவது போல், 24 மணி நேரமும் செயல்படுகின்றன.பெரும்பாலான பார்கள் அதிகாலை, 4:00 மணி முதலே சுடச்சுட இட்லி, கறி குழம்பு என, பல வகை ‘சைடிஷ்’களை கொடுத்து ஈர்த்துவருகின்றன. விற்பனை விலையுடன் குறைந்தபட்சம் ரூ.50 முதல் சேர்த்து, கூடுதல் விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன.

‘டாஸ்மாக்’ விடுமுறை நாட்களில், இரண்டு மடங்கு விலை வைத்து பார் உரிமையாளர்கள் லாபம் பார்க்கின்றனர். கோவில், பள்ளிகள், பஸ் ஸ்டாண்ட்கள் அருகே செயல்படும் ‘டாஸ்மாக்’ பார்களால் பெண்கள், குழந்தைகள் தினமும் பயத்துடன், ‘குடி’மகன்களை கடந்து செல்கின்றனர். குடிக்கு பணம் கிடைக்காதவர்கள் செயின் பறிப்பு, மொபைல் திருட்டு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். சாலை விபத்துகளால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. ‘மாமூல்’ பெற்றுக்கொண்டு, பார்களில் நடக்கும் விதிமீறல்களை கண்டுகொள்ளாத, நேர்மை தவறிய போலீசாராலும், சட்டம் – ஒழுங்கு பிரச்னை ஏற்படுகிறது எனலாம்.

‘எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான்; எப்போதுதான் தீர்வு கிடைக்குமோ’ என கண்ணீர் வடிக்கின்றனர், குடியால் கணவர், பிள்ளைகளை இழந்து நிற்கும் தாய்மார்கள்.

2