கோவை; கோவையில், ரோட்டில் மையத்தடுப்புக்கு அருகே பரவிக்கிடக்கும் மண் துகள்களை அகற்றுவதற்கு, ஏழு மாதத்துக்கு, மூன்று கோடி ரூபாயை மாநகராட்சி செலவிடுகிறது.கோவை நகர்ப்பகுதியில் பிரதான ரோடுகளில், மையத்தடுப்புகளை ஒட்டி மண் துகள்கள் பரவிக்கிடப்பதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைகின்றனர்.
சில சமயங்களில் சறுக்கி விழுந்து காயமடைகின்றனர். மாநில நெடுஞ்சாலைத்துறையில் சாலை பணியாளர்கள் இருந்தவரை, ரோட்டில் பரவிக்கிடக்கும் மண் துகள்களை அகற்றி வந்தனர்.

அவர்களை பணி நீக்கம் செய்ததில் இருந்து, மண்ணை அள்ள, நெடுஞ்சாலைத்துறை அக்கறை காட்டுவதில்லை. பொதுநலன் கருதி, மாநகராட்சி நிதி ஒதுக்கி அள்ளுகிறது.
மண்ணில் ‘கோடிகள்’ மண்டலத்துக்கு இரண்டு வீதம், 10 மினி டிப்பர் வாகனங்கள் ஒப்பந்த முறையில் இயக்கப்படுகின்றன. டிரைவருக்கு தினக்கூலி ரூ.1,150, வாகன வாடகை ரூ.4,100, ஏழு கி.மீ.,க்கு ஒரு லிட்டர் எரிபொருள் என்ற கணக்கில் தொகை செலுத்தப்படுகிறது.
இதற்காக, பிப்., முதல் ஆக., வரையிலான ஏழு மாதத்துக்கு மண்டலத்துக்கு, 23 லட்சம் ரூபாய் வீதம், ஒரு கோடியே, 15 லட்சம் ரூபாய் செலவிட, மாமன்றத்தில் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு மண்டலத்திலும் மண் துகள்களை அள்ளுவதற்கென, பிரத்யேகமாக ஒப்பந்த முறையில் துாய்மை பணியாளர்கள் நியமிக்கவும் அனுமதி தரப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்துக்கு, 60 தொழிலாளர்கள், கிழக்கு, மேற்கில் தலா, 40 பேர், வடக்கு, தெற்கில் தலா, 30 பேர் வீதம் மொத்தம், 200 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான செலவினமாக, இரண்டு கோடி ரூபாய், ஏழு மாதத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதோ மாற்று ஏற்பாடு
அதனால், ரோட்டில் மையத்தடுப்புக்கு அருகே பரவிக்கிடக்கும் மண் துகள்களை சாதாரணமாக நினைத்து விடாதீர்கள். அம்மண் துகளை அகற்றுவதற்கு மட்டும், பொதுமக்களின் வரிப்பணத்தில் இருந்து, மாநகராட்சி மூன்று கோடியே, 15 லட்சம் ரூபாயை ஏழு மாதத்துக்கு செலவிடுகிறது.
இதற்கு மாற்று ஏற்பாடாக, துாய்மை பணியாளர்களையே பயன்படுத்தலாமே. இதற்கென தனியாக ஒப்பந்த ஊழியர்கள் தேவை இல்லை. மக்களின் வரிப்பணத்தை தேவையின்றி செலவிடுவதை, மாநகராட்சி நிர்வாகம் தவிர்க்க வேண்டும்.
Leave a Reply