கோவை: மத்திய அரசின் ராஷ்ட்ரிய பால் சுவாஸ்த்ய காரிக்ரம் (ஆர்.பி.எஸ்.கே.,) திட்டத்தின் கீழ், பள்ளிகள், அங்கன்வாடிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ஏழு பிரிவுகளில் பெரிய அளவிலான குறைபாடுகளுடன் 624 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இதில், 518 பேருக்கு இருதய குறைபாடு இருப்பது தெரியவந்துள்ளது.கோவை மாவட்டத்தில், ஆர்.பி.எஸ்.கே., திட்டத்தின் கீழ், கடந்த 2024 ஏப்., முதல் 2025 மார்ச் மாதம் வரை 1684 அங்கன்வாடியிலும், 1,514 பள்ளிகளில், 3லட்சத்து 78 ஆயிரத்து 298 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், இருதய குறைபாடு, பாதவளைவு, கண், செவி உள்ளிட்ட 7 முக்கிய நோய் பிரிவுகளின் கீழ், 624 குழந்தைகளுக்கு பிறவி குறைபாடு கண்டறியப்பட்டுள்ளன.

இதுகுறித்து, ஆர்.பி.எஸ். கே., திட்ட எஸ்.எஸ்.குளம் பகுதி டாக்டர் ஷாமிடம் கேட்டபோது, ”பள்ளிகளில் மாணவர்களுக்கு கண், பல், நரம்பியல் குறைபாடு, டவுன் சிண்ட்ரோம், கிளப் பூட், சர்க்கரை நோய், காது, எலும்பு சார்ந்த குறைபாடுகள், பிறவி இருதய குறைபாடு என அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொள்கின்றோம்.”ஏதேனும் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், அடுத்தகட்ட பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு இத்திட்ட வாகனங்களிலேயே அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது,” என்றார்.
‘ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்’
அரசு மருத்துவமனை டி.இ.ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜ் கூறுகையில், ”ஆர்.பி.எஸ்.கே., திட்டத்தில் தொடர்ந்து பரிசோதனை செய்வதால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது, ஆரம்ப நிலையில் கண்டறிவதால், பிரச்னை சிறிதாக இருக்கும் போதே நுண் துளை அறுவைசிகிச்சை, தேவைப்படும் குழந்தைகளுக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது,” என்றார்.
‘தொடர் கண்காணிப்பு’
கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறியதாவது: ஆர்.பி.எஸ்.கே., திட்டத்தின் கீழ், குழந்தைகளுக்கு பள்ளி, அங்கன்வாடிகளில் பரிசோதனை தொடர்ந்து மேற்கொண்டு பிறவி குறைபாடுகளை கண்டறிந்து அனைத்து சிகிச்சைகளும் இலவசமாக அளிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை மேற்கொண்ட பரிசோதனைகளின் படி, மேஜர், மைனர் என பட்டியல் தயார்செய்து அதற்கேற்ப சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது. சி.ஹெச்.டி எனும் இருதய குறைபாடுடன் 506 பேரும், ரியூமாடிக் என்ற இருதய குறைபாடுடன் 12 பேரும், பாத வளைவு 56 பேருக்கும், கண் பிரச்னை (கேட்ரேக்ட்) 9 பேருக்கும், செவி குறைபாடு 15 பேருக்கும், நரம்புக்குழாய் குறைபாடு 6 பேருக்கும் கண்டறிந்து சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆரம்ப நிலையில் கண்டறிவதால், குழந்தைகளுக்கு எவ்வித பிரச்னைகளும் எதிர்காலத்தில் ஏற்படாத வகையில் தொடர் கண்காணிப்புகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply