வெயிலுக்கு குட்பை.. தமிழகத்தில் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் வெளுக்கப் போகுது கனமழை! வானிலை அலர்ட்

சென்னை: தமிழகத்தில் வரும் 3 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. நாளை முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 – 4 டிகிரி வரை குறையக்கூடும் என்றும், சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அனலை கக்கும் வெயிலால் மக்கள் வெளியில் செல்வதற்கே தயங்குகிறார்கள். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் வெயில் பல்வேறு இடங்களிலும் சதமடித்து வருகிறது. இந்த நிலையில் நாளையில் இருந்து வெயில் படிப்படியாக குறையும் என்றும், குறிப்பாக நாளை மறுநாள் முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- “தமிழகத்தில் நாளை முதல் 5 ஆம் தேதி வரை வெப்பநிலை 2 – 4 டிகிரி வரை குறையக்கூடும். தமிழகத்தில் இன்றும், நாளையும் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

* நாளை மறுநாள் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

* இதேபோன்று வரும் 4, 5 ஆம் தேதிகளில் தமிழகத்தில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி உள்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

* சென்னையை பொறுத்தவரை சென்னையில் இன்றும், நாளையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில், இன்று முதல் தமிழகத்தில் மழை ஆரம்பிக்கும் என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

வானிலை மையத்தின் அறிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 3 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு சான்ஸ்

4, 5 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை முன்னறிவிப்பு

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு: 01-04-2025 முதல் 05-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 -4° செல்சியஸ் வரை குறையக்கூடும். இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு: 01-04-2025 மற்றும் 02-04-2025: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி-இயல்பை விட சற்று குறைவாக இருக்கக்கூடும். 03-04-2025 முதல் 05-04-2025 வரை: தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில்

சென்னையில் வானிலை எப்படி

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று (01-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (02-04-2025) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: எச்சரிக்கை ஏதுமில்லை.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை :- கரூர் பரமத்தி : 38.0° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்):- கரூர் பரமத்தி: 20.5° செல்சியஸ்

* கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் குறைந்துள்ளது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை.

* தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது. தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 35-38° செல்சியஸ், தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 32-35° செல்சியஸ், மலைப் பகுதிகளில் 21-30° செல்சியஸ் பதிவாகியுள்ளது.
* 24 மணிநேரவெப்பநிலைமாறுதல்: (அதிகபட்சவெப்பநிலை) மிக அதிகரித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இரவில் பனி, பகலில் வெயில்

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் மட்டும் கடந்த 3 நாட்களாக பகலில் வெயிலும் இரவில் பனிப்பொழிவும் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அதே நேரத்தில் இரவு 2 மணிக்கு மேல் பனிபொழிவு இருக்கிறது. இதனால் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்தாலும் இரவில் குளிர்ந்த சூழல் இருப்பதால் சீதோஷ்ண நிலை நிலவுவதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.