கோவை டூ நெல்லை.. அடுத்த 2 மணி நேரத்தில் கொட்ட போகுது மழை! மக்களே அலர்ட் ஆகுங்க! வானிலை மையம் அப்டேட்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் கோவை, நெல்லை உள்பட 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே வானிலை மையம் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.


தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிய பிறகே வெயில் சுட்டெரிக்க தொடங்கும் நிலையில், நடப்பு ஆண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே வெயில் சுட்டெரித்தது. கோடைக்காலம் தொடங்கியது போல வெயில் அனலை கக்கி வந்தது. இதனால் மக்கள் வெளியில் செல்லவே தயங்கினர்.
கொளுத்தி எடுத்த வெயில் ஆனால் இடையிடையே தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தது. இதனால் பெரிதாக வெயில் தெரியவில்லை. ஒரு வாரத்திற்கு மழையும், பின்னர் ஒரு வாரத்திற்கு வெயிலும் என கிளைமேட் மாறி மாறி இருந்தது. இப்படியே மார்ச் மாதம் கடைசி வரை சென்றது. ஆனால் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் வெயில் தினமும் உச்சத்தை தொட்டு வந்தது. சென்னையில் 25 ஆண்டுகளுக்கு இல்லாத வகையில் வெப்பநிலை பதிவாகியது. கடந்த ஒரு வாரமாக இப்படி வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது, வரும் 3 ஆம் தேதி முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியது. இன்றும் கூட தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியிருந்தது. வானிலை மையம் கூறியபடியே தென் மாவட்டங்களில் இன்று மதியத்திற்கு பிறகு கிளைமேட் மாறியது.

மதியம் வரை சுட்டெரித்த வெயில், மதியத்திற்கு பின் அப்படியே மாறியது. குளிரான சூழல் உருவாகியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குறிப்பாக தென்காசி மாவட்டத்தின் கடையம், ஆலங்குளம் பகுதியில் கிளைமேட் மாறி காணப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு “தமிழகத்தில் இன்று இரவு 7 மணி வரை, நெல்லை, குமரி மாவட்டங்களின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் மற்றும் கோவை ஆகிய 3 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

“தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுநாள் 3 ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

4, 5 ஆம் தேதிகளில், தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் கிளைமேட் எப்படி 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இன்று (01-04-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (02-04-2025) சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை: எச்சரிக்கை ஏதுமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.