தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில், உணவு கழிவுகளை முறையாக அகற்றாததாலே, காட்டு யானைகள் உணவை தேடி வருவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் உள்ள, தென்கயிலாயம் எனப்படும் வெள்ளியங்கிரி மலையில், ஏழாவது மலை உச்சியில், சுயம்பு வடிவில் வீற்றிருக்கும் ஈசனை, தரிசிக்க பக்தர்கள் மலையேறி வருகின்றனர்.
பட்டா நிலத்திலிருந்து, சுமார், 2.5 கி.மீ., தொலைவில், இம்மலையின் அடிவாரத்தில், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மீதமாகும் உணவு கழிவுகள்
இந்த கோவில் அமைந்துள்ள இடம், வனத்துறைக்கு சொந்தமான பகுதி. இப்பகுதியில் உள்ள குப்பை அகற்றுதல், குடிநீர் வினியோகம் போன்றவை, இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியின் பொறுப்பாகும். இந்நிலையில், கோவிலுக்கு வரும் பக்தர் மற்றும் மலையேறும் பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம், தனியார் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் சார்பில், நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஆனால், அன்னதானத்தில் மீதமாகும் உணவுக்கழிவுகளை, முறையாக அகற்றாமல் அருகிலேயே, குழி தோண்டி கொட்டி வருகின்றனர். அதோடு, உணவு உண்ண பயன்படுத்திய பாக்கு தட்டுகளையும், அந்த குழியிலிட்டு, தீவைத்து எரிக்கின்றனர்.
வனப்பகுதியில் தீ!
அடர் வனப்பகுதியில் தீ வைக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளபோதும், இது போன்ற செயல்கள் தொடர்கின்றன.இதுகுறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கோவில் நிர்வாகமும், வனத்துறையும் கண்டுகொள்வதில்லை.
குழியில் கொட்டப்படும் உணவுகளை, காட்டு யானைகளும், குரங்குகளும் உண்டு வருகின்றன. அடர் வனப்பகுதியில், இறை பக்தியில் வரும் பக்தர்களுக்கு உதவ முன்வருபவர்கள், இதுபோல் செய்யும் சில தவறுகள், வனவிலங்குகளின் உணவு முறையை அடியோடு மாற்றி விடுகின்றன.
ருசி தேடி வரும் யானைகள்
இதுபோன்ற உணவுகளை உட்கொண்டு பழகும் வனவிலங்குகள், சமையலறை, அன்னதானக்கூடங்களுக்குள் அதே ருசியான உணவை தேடி வருகின்றன.
எனவே, கோவிலை எவ்வாறு தூய்மையாக பராமரிப்பு செய்வோமோ, அதேபோன்று, இறைவன் வீற்றிருக்கும் வனப்பகுதியையும், தூய்மையாக பராமரிக்க வேண்டியதும் நம் தலையாய கடமை என்பதை, அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.வனத்தையும், கோவிலையும், வனவிலங்குகளையும் காக்கவும், பக்தர்களின் தேவையற்ற பதற்றத்தை நீக்கவும், வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் வளாகத்தில் சேகரமாகும் உணவுக்கழிவுகளை, முறையாக அகற்ற வேண்டும்.சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தை பேண, அறநிலையத்துறை, வனத்துறை, உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Leave a Reply