கோவை; ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்’ என்பதற்கேற்ப, கோவையின் வடமேற்கு திசையில், 15 கி.மீ., தொலைவில், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கடல் மட்டத்தில் இருந்து, 741 மீட்டர் உயரத்தில் வீற்றிருந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், மருதமலை சுப்ரமணிய சுவாமி.
கொங்கு நாட்டில் பிரசித்தி பெற்ற இத்திருத்தலத்தை பற்றி, பட்டிபுரி என்ற பேரூர் புராணத்தில், மருதவரை படலத்தில் கச்சியப்ப முனிவர் குறிப்பிட்டிருக்கிறார். கொங்கு சோழர்களால் நிர்மாணிக்கப்பட்டது இக்கோவில். விஜயநகர பேரரசர்கள் மற்றும் கொங்கு சிற்றரசர்களால், திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கின்றன.மருதமலையை ‘மருந்து மலை’ என கூறுவதுண்டு. அந்தளவுக்கு பக்தர்களின் உடற்பிணியும், மனப்பிணியும் நீங்கும் வகையில், மூலிகை மரங்கள் நிறைந்திருக்கின்றன. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு படிக்கட்டு வழியாக வரும் பக்தர்கள், இளைப்பாறுவதற்கு ஆங்காங்கே மண்டபங்கள் கட்டப்பட்டிருக்கின்றன.
lமலையடிவாரத்தில் படிக்கட்டுப் பாதையின் துவக்கத்தில், தான்தோன்றி விநாயகர் கோவில் உள்ளது. இவரை வணங்கிச் சென்றதும், பதினெட்டாம் படி இருக்கிறது. சபரிமலை சென்று ஐயப்பனை வழிபட இயலாதவர்கள், பதினெட்டாம்படிக்கு வந்து வழிபடுவது வழக்கம்.
l இடும்பனை வணங்கிச் சென்றால், குதிரைக்குளம்பு சுவடு இருக்கிறது. அதற்கென மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. சூரர்களை வெற்றி கொள்ள புறப்படும்போதோ அல்லது திரும்பி வரும்போதோ குதிரைக் குளம்புகள் பதிந்த இடமென கருதப்படுகிறது. உண்டியல் பொருட்களை திருடர்கள் திருடிச் சென்றபோது, முருகப்பெருமான் அவர்களை தேடிச் சென்ற சமயத்தில் ஏற்பட்ட குதிரையின் குளம்படியாகவும் இருக்கலாம் என பக்தர்கள் கருதுகின்றனர்.
l படியேறி மலையை அடைந்தால் நேரே சன்னதி உள்ளது. லிங்க வடிவில் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் மூவரும் காட்சி தருகின்றனர். முதலில், ஆதி மூலஸ்தானமாகிய வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு பூஜை துவங்கும்.
l திருக்கோவில் தென்புறத்தில் படிக்கட்டுகள் வழியாக, கீழிறங்கி, கிழக்கு திசை நோக்கி சென்றால், பாம்பாட்டி சித்தர் சன்னதி அமைந்துள்ளது. அங்குள்ள பாறை, பாம்பு போன்ற அமைப்பில் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. பாம்பாட்டி சித்தர் கோவிலுக்கும், ஆதி மூலஸ்தானத்துக்கும் இடையே சுரங்க வழி உண்டு. அதன் வழியாக, ஆதி மூலஸ்தானத்தில் வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகனை சித்தர் வழிபட்டார் என்பார்கள். இவர் வாழ்ந்த குகையில், ஒரு பாம்பு, பாலும் பழமும் உண்டு செல்வதை பார்க்கலாம். தற்போதும் பக்தர்கள் பாம்புக்கு பாலும் பழமும் அளிக்கின்றனர். இங்கு தியானம் செய்வது மன அமைதி தரும்.
l பிரதான சன்னதிக்கு வலதுபுறம் உள்பிரகாரத்தில் பட்டீஸ்வரர் சன்னதி, இடதுபுறம் மரகதாம்பிகை சன்னதி அமைந்துள்ளது. உமை மற்றும் மகேஸ்வரர் சன்னதிகளுக்கு இடையே முருகன் சன்னதி உள்ளது. சோமாஸ்கந்த மூர்த்தம் என்கிற சிறப்பினை இவ்வமைப்பு பெற்றிருக்கிறது.
l ஏழு நிலை ராஜகோபுர நுழைவாயிலை கடந்தால், கல்லால் ஆன தீப ஸ்தம்பத்துக்கு முன், வலம்புரி விநாயகர், உலோகத்திலான கொடி மரம், மயில் வாகனம் அமைந்துள்ளது. கருவறையின் நுழைவாயிலின் வலப்புறத்தில் விநாயகரும், இடப்புறம் வீரபாகுத்தேவர் மற்றும் ஆத்மலிங்கம், மார்கண்டேய லிங்கம் என்கிற சிவலிங்கங்கள், கருவறையில் தண்டாயுதத்துடன் காட்சி தரும் மூலவர் சுப்ரமணிய சுவாமி என, கோவில் அமைந்திருக்கிறது.
l ஐந்து மரங்கள் ஒன்றாக பின்னி பிணைந்து வளர்ந்துள்ள பழமையான மரம், மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அமைந்துள்ளது; மரத்தடியில் பஞ்சமுக விநாயகர் எழுந்தருளியுள்ளார். தல விருட்சமாக மருத மரம் உள்ளது.
ஒரு முறை மருதமலைக்கு நீங்கள் வந்து பாருங்கள்; ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்கள். தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும்.
Leave a Reply