கோவை: வாடகைக்கு அனுப்புவதற்காக உரிமையாளர்களிடம் இருந்து கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களை வாங்கி அடமானம் வைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில் சமீபகாலமாக ஆன்லைன் திருட்டு, ஆஃப்லைன் திருட்டு என பல மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. விளம்பரம் பார்த்தால் பணம் கொட்டும், இரட்டிப்பு வருமானம், குறைந்த முதலீடு அதிக வருமானம் போன்ற விளம்பரங்களை நம்பி பொதுமக்கள் ஏமாறும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அண்மையில் வி3 எனும் ஆப் மூலமாக விளம்பரம் பார்த்தால் லட்சங்களில் பணம் சம்பாதிக்கலாம் என்பதனை நம்பி லட்சக்கணக்கான பொதுமக்கள் முதலீடு செய்து ஏமாந்த சம்பவம் அனைவரும் அறிந்ததே.
இதுபோன்ற விஷயங்களை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம். அஞ்சலகம், வங்கி, அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் பொதுமக்கள் தங்களது பணத்தை பாதுகாப்பாக சேமிக்கலாம் என்று தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், கோவையில் சமீபகாலமாக அதிக அளவில் மோசடி சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. புதுப்புது ரூட்டுகளில் மோசடி சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்துக்குள்ளாகி உள்ளனர். அந்த வகையில், கோவையில் புது வகை மோசடியாக நான்கு சக்கர வாகனங்களை உரிமையாளர்களிடம் இருந்து வாடகைக்கு அனுப்புவதாக வாங்கி அடமானம் வைத்து மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதுபோன்ற மோசடிகளில் சிக்கி வாகனங்களை திரும்ப வாங்க முடியாமல் அலைக்கழிப்பதாக உரிமையாளர் கோவை காவல் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கோவையில் வாகனங்களை அட்டாச்மென்ட் செய்து மாத வாடகை பெறலாம் என விளம்பரங்கள செய்யப்பட்டன. இதையடுத்து பொதுமக்கள் பலரும் இதனை நம்பி வாகனங்களை அட்டாச்மென்ட் செய்துள்ளனர். வாடகைக்கு பெற்ற வாகனங்களை உரிமையாளர்களுக்குத் தெரியாமல் அடமானம் வைத்து ஏமாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின்பேரில் கோவையைச் சேர்ந்த யசோதா தேவி என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கு தொடர்பாக அட்டாச்மென்ட் செய்யப்பட்ட வாகனங்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணியை நீதிமன்ற உத்தரவின் பேரில் காவல் துறையினர் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்த முத்துக்குமார் என்பவருடைய மாருதி பெலினோ வாகனத்தை இதுவரை காவல் துறையினர் ஒப்படைக்கவில்லை என பாதிக்கப்பட்ட முத்துக்குமார் கோவை மாநகர் காவல் ஆணையாளரிடம் புகார் அளித்து உள்ளார். அந்தப் புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது வாகனத்தைப் பெற முடியாமல் அலைக்கழிக்கப்பட்டு வருவதாகவும், புதிய கார் என்பதால் அதற்கு லோன் கட்ட முடியாமல் தனது வாழ்வாதாரமே பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், உடனடியாக காவல் துறையினர் தனது வாகனத்தை மீட்டுத் தர வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.
Leave a Reply