தொண்டாமுத்தூர்; கோவை மாவட்டத்தில், தனியார் நிலங்களில் மின்வேலிகள் அமைப்பதற்கு பதிவு செய்ய வேண்டும் என்பது குறித்து விவசாயிகளுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, கள ஆய்வு பணியாளர்களையும் அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.பல்வேறு காரணங்களால், வனவிலங்குகள், வனப்பகுதியை விட்டு வெளியேறி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால், மனித — விலங்கு மோதல் சம்பவங்கள் நடக்கின்றன.
விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும், பயிர் மற்றும் உடைமைகள் சேதம் ஏற்படுகிறது. விவசாயிகள் தங்கள் உடைமைகளையும், உயிரையும் பாதுகாக்க, விளைநிலங்களிலும், தனியார் நிலங்களிலும், மின்வேலி அமைக்கின்றனர்.
இதில், சிலர் சோலார் மின்வேலிகளுக்கு பதிலாக, மின்சாரத்தில் நேரடி இணைப்பு கொடுப்பதால், அதில், வனவிலங்குகள் சிக்கி உயிரிழக்கின்றன. சில சமயங்களில், மனிதர்களும், மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.
விதிகள் சொல்வதென்ன?
வனவிலங்குகளை பாதுகாக்கவும், மின்வேலிகள் அமைப்பதை ஒழுங்குபடுத்தவும், தமிழக அரசு சார்பில், தமிழ்நாடு மின் வேலிகள் (பதிவு மற்றும் ஒழுங்குமுறை) விதிகள் 2023 அறிவிக்கப்பட்டது.இதன்படி, காப்புக்காட்டில் இருந்து 5 கி.மீ., தொலைவு வரை உள்ள விவசாய நிலங்களில், சோலார் மின் வேலிகள் அமைக்க, மாவட்ட வன அலுவலரிடம், முன் அனுமதி பெற வேண்டும்.
ஏற்கனவே, அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை பதிவு செய்ய வேண்டும். விளைநிலங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளை, வனத்துறை மற்றும் மின்வாரிய அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு, 15 நாட்களுக்கு ஒரு முறை கள ஆய்வு செய்து, விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலான விவசாயிகளுக்கு, இதுகுறித்த விவரங்கள் தெரிவதில்லை.
எனவே, வனவிலங்குகளை பாதுகாக்க, மின்வேலி அமைப்பதற்கு உள்ள விதிமுறைகள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அதோடு, வனத்துறை மற்றும் மின்வாரியத்தில், பணியாளர்களுக்கு, ஏற்கனவே கூடுதல் பணிச்சுமை உள்ளதால், இதுபோன்ற கள ஆய்வு பணிகளுக்காக, கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
அதிகாரிகள் சிலர் கூறுகையில், ‘மின்வேலி விதிமுறைகளின்படி, சுமார், 25 சதவீதம் பேர் மட்டுமே பதிவு செய்கின்றனர். மீதமுள்ளவர்களில் பலருக்கும் விதிமுறை குறித்து தெரிவதில்லை. அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், முழு கள ஆய்வு நடத்தவும், துறைகளில் கூடுதல் பணியாளர்கள் நியமிக்க வேண்டியது அவசியம்’ என்றனர்.
Leave a Reply