20 முதல் துாய்மை பணியாளர்கள் ‘ஸ்டிரைக்’; மாநகராட்சிக்கு நோட்டீஸ் அனுப்பிய யூனியன்

கோவை; கோவையில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள், 20ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக, கோயமுத்துார் லேபர் யூனியன் சார்பில், மாநகராட்சிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில், துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், கிளீனர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். குப்பை அள்ளும் பணியை மேற்கொண்ட தனியார் நிறுவனம், தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த பி.எப்., தொகையை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவது; கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 15 நாட்களுக்குள் பேச்சு நடத்தி, தீர்வு காண வேண்டுமென, கோயமுத்துார் லேபர் யூனியன் செயலாளர் செல்வராஜ், மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
Latest Tamil News

மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை. பழைய நிறுவனத்துக்கு பதிலாக, சென்னையை சேர்ந்த வேறொரு நிறுவனத்துக்கு குப்பை அள்ளும் பணியை வழங்க, மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. புதிய நிறுவனம் பணியை துவக்கும் காலம் வரை, இரண்டு மாதத்துக்கு பழைய நிறுவனம் குப்பை அள்ளும் பணியை செய்யுமென மாநகராட்சி தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் தொழிலாளர்களுக்கு பி.எப்., தொகை வழங்குவது, சம்பள நிலுவை வழங்குவது தொடர்பாக, மாநகராட்சி நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையடுத்து வரும், 20ம் தேதி காலை, 6:00 மணி முதல் மாநகராட்சியில் பணிபுரியும் ஓட்டுனர்கள், துாய்மை பணியாளர்கள், உள்ளிட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் காலவரையின்றி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என, கோயமுத்துார் லேபர் யூனியன் பொது செயலாளர் பாலகிருஷ்ணன், செயலாளர் செல்வராஜ் ஆகியோர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.