அவிநாசி மேம்பாலம் திடீர் திடீர்னு உடையுதாம்!.. ஆடி காரை பதம் பார்த்த கான்கிரீட்.. அலறிய உரிமையாளர்

கோவை: கோவை – அவிநாசி சாலையில் போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் திடீரென கான்கிரீட் விழுந்து ஆடி காரின் கண்ணாடி உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொழில் நகரமான கோவை மாவட்டத்தில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கோவையில் போக்குவரத்து நெரிசல் பிரதானப் பிரச்சனையாக மாறி வருகிறது. குறிப்பாக கோவையில் உள்ள மிக முக்கியமான சாலை என்றால் அவிநாசி சாலை தான். விமான நிலையம், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஹோட்டல்கள், கல்லூரிகள், அரசு, தனியார் நிறுவனங்கள் இந்த சாலையில் தான் உள்ளன.

சென்னை, பெங்களூர், ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லவும், அங்கிருந்து கோவை மாநகரத்துக்குள் வரவும் அவிநாசி சாலையையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். கல்லூரிகள், ஐடி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் பெருமளவில் உள்ளதால் பீக் ஹவர்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை ரூ.1,621.30 கோடி மதிப்பில் 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட பாலம் கட்டும் பணி கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட்டது. இந்தப் பணிகள் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. Powered By

கோவையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் அடுத்தடுத்து ஏதாவதொரு பிரச்சனையில் சிக்குவது வழக்கம். கட்டி முடித்த பின்னர் பொத்தல் ஏற்படுவது, கான்கிரீட் பெயர்வது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். ஆனால், அவிநாசி மேம்பாலம் கட்டும்போதே பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அவிநாசி மேம்பாலத்தைக் கண்டாலே பொதுமக்கள் அலறும் வகையில் கான்கிரீட்கள் பெயர்ந்து சாலையில் விழும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

2024 ஆம் ஆண்டு கடந்த டிசம்பர் மாதத்தில் அவிநாசி சாலை, ஹோப்ஸ் காலேஜ் அருகே ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அப்போது, மேம்பாலத்தில் இருந்து திடீரென கான்கிரீட் கலவை பெயர்ந்து விழுந்தது. இதில் அந்த காரின் முன்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இச்சம்பவம் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் என பலரும் இந்த சாலையை அதிக அளவில் பயன்படுத்தி வரும் நிலையில் கான்கிரீட் உடைந்து கார் கண்ணாடி உடைந்த சம்பவம் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்தை தொடர்ந்து, தனியார் மருத்துவமனை மருத்துவர் மேத்தீவ் செரியன் என்பவர் தனது ஆடி சொகுசு காரில் நேற்று காலை மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது, ஃபன் மால் அருகே சென்றபோது மேம்பாலத்தில் இருந்து கான்கிரீட் பெயர்ந்து ஆடி சொகுசு கார் மீது விழுந்தது. இதில் காரின் முன் பகுதி கண்ணாடி உடைந்து சிதறியது. இதுகுறித்து மருத்துவர் மேத்தீவ் செரியன் கூறுகையில், கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததால் காரின் முன்பக்க கண்ணாடி உடைந்துள்ளது. கிட்டத்தட்ட ரூ. 1 லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. பணத்துக்காக மட்டும் பேசவில்லை இதுவே இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்திருந்தால் என்னாகியிருக்கும். கான்கிரீட் பெயர்ந்து விழுவது முதல் முறை அல்ல. பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இச்சம்பவத்துக்கு யார் பெறுப்பேற்பது என்றார்.அவிநாசி சாலையில் தொடர்ந்து கான்கிரீட் பெயர்ந்து விழும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது. அதேசமயம், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.