“இனி அவகிட்ட பேசக்கூடாது”.. கல்லூரி மாணவர் மீது கொலை வெறி தாக்குதல் – கோவையில் அதிர்ச்சி

கோவை: கோவையில் தங்களது சமூகத்தைச் சேர்ந்த பெண்ணிடம் பேசியதால் ஆத்திரமடைந்த கும்பல், கல்லூரி மாணவரை மிரட்டியதோடு மட்டுமல்லாமல் பீர் பாட்டில், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியதில் தலை, முகம், கண் பகுதியில் பலத்த காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.


கல்வி, பொருளாதாரம், பகுத்தறிவு என பலவற்றை குறித்து பேசினாலும் ஜாதி, மதம் பார்க்காத அளவுக்கு சமுதாயம் வளர்ந்துவிட்டதா என்றால் கட்டாயம் இல்லை. படித்தவர்கள் கூட தங்களது பெயரின் பின்னால் ஜாதியை தூக்கி சுமந்து கொண்டிருப்பதை இன்றும் கூட பார்க்க முடிகிறது. குறிப்பாக, தங்களுடைய சமூகத்தைச் சேர்ந்த பெண்ணோ, ஆணோ வேறு சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்துவிட்டால் ஆணவக் கொலை செய்யும் அளவுக்கு செல்லும் நிலை தான் இன்றும் உள்ளது.

சமீபத்தில் கூட திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த காரணத்துக்காக கூட பிறந்த அண்ணனே வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் ஓய்வதற்குள்ளேயே கோவையில் மற்றொரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சஞ்சய் என்பவர் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். அதே வகுப்பில் தன்னுடன் பயிலும் இஸ்லாமிய சமுதாயப் பெண்ணுடன் சஞ்சய் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் காதலிப்பது அந்த மாணவி இருக்கும் வீட்டின் பகுதியில் உள்ள சில இளைஞர்களுக்குப் பிடிக்காமல் இருந்துள்ளது. ஒருகட்டத்தில் தங்கள் சமுதாயப் பெண் மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த ஆணுடன் பழகுவது இவர்களுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் என்ற இரண்டு இளைஞர்கள் சஞ்சயை உக்கடம் அருகே உள்ள ஒரு பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களை நம்பி சஞ்சயும் சென்றுள்ளார். அப்போது, முகமது பஷீத்தின் நண்பர்கள் 8 பேர் அந்த கட்டடத்துக்குள் இருந்துள்ளனர்.

இதனை சஞ்சய் சற்றும் எதிர்பார்க்காத நிலையில், “எதுக்காக அந்தப் பொண்ணுகிட்ட பேசுற, இனி நீ அவகூட பேசக் கூடாது” என்று கூறி அவரை மிரட்டியுள்ளனர். தொடர்ந்து சஞ்சயை பீர் பாட்டில் மற்றும் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் 8 பேரும் மாற்றி மாற்றி கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் சஞ்சய் தலை, முகம், கண் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயமடைந்துள்ளார். இதையடுத்து, அங்கிருந்து தூக்கி அவர்கள் சஞ்சயை கல்லூரியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். பலத்த காயமடைந்த சஞ்சய் தனக்கு நேர்ந்த இச்சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். பின்னர், சஞ்சயை உடனடியாக மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், முகமது பஷீத் மற்றும் முகமது சஜீத் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். மாற்று சமுதாயப் பெண்ணிடம் பழகியதற்காக இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.