கோவை: ராணுவ வாகனங்கள் வெடி விபத்துகளில் சிக்கி சேதமடைவதை தடுக்க, கோவை, அமிர்தா பல்கலை., பேராசிரியர், புதிய தடுப்பு பொருளை உருவாக்கியுள்ளார்.
கோவை, அமிர்தா பல்கலை., பேராசிரியர் சாந்தனு பவுமிக் தலைமையில், மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், ஒரு பாதுகாப்பு பொருள் உருவாக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியை, இந்திய கடற்படையின் மூன்று அதிகாரிகள், ராணுவ அதிகாரி ஒருவர், அமிர்தா பல்கலை பி.எச்டி., மாணவர்கள் நால்வர் இணைந்து மேற்கொண்டனர். மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், சண்டிகர் டெர்மினல் பாலிஸ்டிக் ஆராய்ச்சி ஆய்வகத்தில், 600 மி.மீ., ஆழத்தில், 10 கி.கி., எடையுள்ள வெடிபொருளை வெடிக்க செய்து சோதிக்கப்பட்டது. இத்தொழில்நுட்பத்துக்கு, ‘ஷாஹீத் உதம் சிங் ஆர்மர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் சாந்தனு பவுமிக் கூறுகையில், ‘புல்வாமா தாக்குதல், இத்தடுப்பு பொருளை உருவாக்க துாண்டியது. எட்டு ஆண்டுகள் கடின உழைப்பால், குண்டுவெடிப்பு எதிர்ப்பு கலப்பின கலவையை உருவாக்கினோம். இதை பாதுகாப்புப் படைத் தலைவர் ஜெனரல் அனில் சவுகான் மற்றும் தேசிய பாதுகாப்புப் படைத் தலைவர் அஜித் தோவல் ஆகியோர் ஆய்வு செய்து, ஒப்புதல் வழங்கியுள்ளனர்’ என்றார்.
பேராசிரியர் சாந்தனு பவுமிக், ஏற்கனவே, நான்கு முக்கியமான தொழில்நுட்பங்களை உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply