கோவை: கோவையில் 654 ஏக்கர் பரப்பளவு கொண்ட, வெள்ளலூர் குப்பைக்கிடங்குக்கு கொண்டு வரப்படும் குப்பை, விண்ட்ரோ முறையில் தரம் பிரித்து, உரமாக்க தினமும் 700 மெட்ரிக் டன் குப்பை மேலாண்மை செய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை மூலம் தினமும் மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது. வெள்ளலூர் குப்பை கிடங்கில் ரூ.69 கோடியில் இயற்கை எரிவாயு மையம் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கூறினார்.

குப்பைக்கிடங்கில் தேங்கியுள்ள பழைய குப்பையை அகற்ற ரூ.60 கோடியில் பயோமைனிங் திட்டத்தை செயல்படுத்தப்பட்டு 54 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. பயோ மைனிங் 2.0 திட்டம் ரூ.58.54 கோடியில் தயாரிக்கப்பட்டு 7.94 லட்சம் மெட்ரிக் டன் குப்பை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மாநகரில் தினமும் சேகரமாகும் மக்கும் கழிவுகளை அகற்ற ரூ.69 கோடியே 20 லட்சத்தில் 250 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இயற்கை எரிவாயு மையம் அமைக்கும் பணி தொடங்கப்பட உள்ளது. மக்கும் குப்பையை தனியாக சேகரித்து எரிசக்தி உருவாக்கும் திட்டம் செயல்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வெள்ளலூர் வளாகத்தை சுற்றிலும் 4,200 மரக்கன்றுகள், சாலையின் இருபுறமும் 800 மரக்கன்றுகள் நடப்பட்டு பசுமை பகுதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply