கோவை: கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சான்றிதழ்கள் பெற, உதவித் தொகை பெற என அனைத்திற்கும் லஞ்சம் வாங்கப்படுகிறது. பத்திரப் பதிவு, லைசென்ஸ் பெறுவது, பாஸ்போர்ட் விண்ணப்ப பரிசீலனைக்கு லஞ்சம் பெறும் பிரச்சனைகள் எல்லாம் காலம் காலமாக உள்ளது. லஞ்சம் வாங்கும் நபர்கள் பலர் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு வரும் நிலையிலும் கூட, லஞ்சம் என்பது ஒழிந்த பாடில்லை. இந்நிலையில், கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விசாரணைக்காக 1000 ரூபாய் லஞ்சம் வாங்கிய காவலர் ரமேஷ் என்பவரை கோவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், செட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் பாஸ்போட்டிற்காக விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், காவல் துறை விசாரணைக்காக விண்ணப்பம் அனுப்பப்பட்டு இருந்தது. இந்த விண்ணப்பத்தை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் என்பவர் விசாரணை செய்துள்ளார்.
கிருஷ்ணமூர்த்தியின் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பரிசீலனை செய்வதற்காக அந்த காவலர் 1000 ரூபாய் லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் விசாரணையை முடுக்கினர். கிருஷ்ணமூர்த்தியிடம் ரசாயனம் தடவிய பணத்தை கொடுக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில், இன்று கிருஷ்ணமூர்த்தி செட்டிபாளையம் காவல் நிலையத்திற்குச் சென்று 1,000 ரூபாய் லஞ்ச பணத்தை காவலர் ரமேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் ரமேஷை கையும் களவுமாக கைது செய்தனர். ரசாயனம் தடவிய பணத்தை ரமேஷிடம் இருந்து பறிமுதல் செய்தனர். செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Leave a Reply