கோவை: கோவையில் நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் கோவில்பாளையம், வாகரம் பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் காரணம்பேட்டை, செலக் கரிச்சல், ஒத்தக்கால்மண்டபம், வழுக்குப்பாறை, நவக்கரை வரை 81 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைத்து கோவை கிழக்கு புறவழிச்சாலை உருவாக்க அரசு திட்டமிட்டது. அந்த திட்டத்தை அரசு போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும் என கொடிசியா கோரிக்கை வைத்துள்ளது.
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ‘கோவை மாஸ்டர் பிளான்-2041’ தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் பவன்குமார் தலைமையில் நடந்தது.இந்த கூட்டத்தில் கொடிசியா தலைவர் கார்த்திகேயன், துணைத் தலைவர் ரங்கசாமி, உதவி இணை செயலர் சுரேஷ் குமார் மற்றம் நிர்வாகிகள், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் மற்றும் செயலாளர் ஜெயக்குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் அவர்கள் கூறுகையில், “நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் கோவில்பாளையம், வாகரம் பாளையம், கருமத்தம்பட்டி மற்றும் காரணம்பேட்டை, செலக் கரிச்சல், ஒத்தக்கால்மண்டபம், வழுக்குப்பாறை, நவக்கரை வரை 81 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழி நெடுஞ்சாலை அமைத்து கோவை கிழக்கு புறவழிச்சாலை உருவாக்க அரசால் திட்டமிடப்பட்டது. அந்த பணிகளை போர்க்கால அடிப்படையில் தொடங்க வேண்டும். மெட்ரோ ரெயில், சாலை சந்திப்புகளில் மேம்பாலங்கள் கொண்ட 6 வழி நெடுஞ்சாலையாக கிழக்கு புறவழிச்சாலை இருக்க வேண்டும். கிழக்கு புறவழிச்சாலை ரோடு கோவை வளர்ச்சிக்கு மிகவும் அவசியம். மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய நிலத்தில் இருபுறமும் 1,000 மீட்டர்கள் தொழில்துறை பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். கோவையில் கோவை நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (சி.யு.டி.ஏ.) அமைக்க வேண்டும். அனைத்து வறண்ட நிலங்கள், தொழில்துறை மற்றும் தொழிற்சாலை பூங்காக்களின் அணுகு சாலைகளை 40 அடி அகலம் வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். அனைத்து பகுதிகளிலும் குறுக்கு சாலைகள் ஏற்படுத்த வேண்டும்” இவ்வாறு அதில் கூறியிருந்தனர். Powered By
முன்னதாக கோவை மாஸ்டர் பிளான் தொடர்பான கூட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் பரிந்துரை செய்யப்பட்டன. அதன்படி 2041-ம் ஆண்டுவரையிலான மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு கோவையில் ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்துவது அவசியம் என்று பரிந்துரை செய்யப்பட்டது. கோவையில் வரப்போகும் மெட்ரோ ரெயில், சாலையோர நடைபாதைகள், சைக்கிள் ஓட்டும் பாதைகள், பஸ்கள் மற்றும் லாரிகளுக்கான டெப்போக்கள் அவசியமாகிறது. 1,531 சதுர கிலோ மீட்டர் கோவை மாநகராட்சி, 4 நகராட்சிகள், 21 டவுன் பஞ்சாயத்துகள், 66 பஞ்சாயத்துகளை உள்ளடக்கி விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது கோவை மாநகரின் மக்கள் தொகை 31 லட்சமாக உள்ளது. 2041-ம் ஆண்டு மக்கள் தொகை 58 லட்சத்து 20 ஆயிரமாக உயரும் என்பதால் அதற்கு தகுந்தவாறு வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.
இதேபோல் கோவை மாநகரம் மற்றும் கோவை புறநர் வளர்ச்சிக்காக கரவளிமாதப்பூரில் சரக்குமுனையம் 218 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக மாஸ்டர் பிளான் குறித்து அதிகாரிகள் கூறினார்கள். சரக்கு ரெயில் போக்குவரத்தும் இதனுடன் இணைக்கப்படும் என்றும் கூறினார்கள். கோவை மற்றும் சேலம் இடையே 180 கி.மீ. தூரத்திற்கு விரைவு ரயில் போக்குவரத்து அமைப்பை உருவாக்கவும் பரிந்துரை செய்யப்படுவதாகவும், கோவையை திருப்பூர், பொள்ளாச்சி, பாலக்காடு ஆகியவற்றுடன் இணைக்கும் புறநகர் ரெயில்களை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
Leave a Reply