கோவை: கோவை, செங்குட்டைபாளையத்தில் பூப்பெய்திய பட்டியலின மாணவியை வகுப்பறைக்கு வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த விவகாரத்தில் பள்ளி முதல்வர் உள்ளிட்ட 3 பேர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே செங்குட்டைபாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு எட்டாம் வகுப்பு படிக்கும் அருந்ததிய சமூகத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் ஏப்ரல் 5 ஆம் தேதி பூப்பெய்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முழு ஆண்டு தேர்வுகள் நடைபெற்று வருவதால் தேர்வு எழுதுவதற்காக பள்ளிக்கு வழக்கம்போல சென்றுள்ளார்.
ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் மாதவிடாயை காரணம் காட்டி சிறுமியை வகுப்பறைக்குள் அனுமதிக்காமல் வகுப்பறையின் வாசலிலேயே அமர வைத்து தேர்வு எழுத வைத்துள்ளனர். இதனை சிறுமியின் தாய் தனது செல்போனில் பதிவு செய்த இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பெரும் பேசு பொருளாகியுள்ளது. மாணவியை வெளியே அமரவைத்து தேர்வு எழுத வைத்த பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் புகார் மனு அளித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் ஏ.எஸ்பி. சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்டார். இந்நிலையில், பள்ளி முதல்வரை சஸ்பெண்டு செய்து பள்ளியின் தாளாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு கல்வித் துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் மாணவியின் தந்தை சுரேந்திரராஜ் அளித்த புகாரின் பேரில், பள்ளி முதல்வர் ஆனந்தி, அலுவலக உதவியாளர் சாந்தி மற்றும் தாளாளர் தங்கவேல் பாண்டியன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெகமம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மாவட்ட பள்ளிக் கல்வித் துறை உதவி இயக்குனர் வடிவேல் மற்றும் காவல் துறையினர் பள்ளியில் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடமும், மாணவியின் பெற்றோரிடமும் உதவி காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த சம்பவத்தில் தீண்டாமை கொடுமை இல்லை என ஊடகங்களுக்கு பேட்டியளித்தார். இந்நிலையில், தற்போது பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் உட்பட மூவர் மீது வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply