தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கயிலாயம் எனப்படும், வெள்ளியங்கிரி மலைத்தொடரின் அடிவாரத்தில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜைகளும், திருவீதி உலாவும் நடந்தது. நேற்று முன்தினம் இரவு வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 6:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது.
காலை, 8:00 மணிக்கு, நடராஜர் அபிஷேகம் மற்றும் தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து மாலை, 3:45 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார் எழுந்தருளினர். மாலை, 4:35 மணிக்கு, தேர் வடம்பிடித்தல் நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
‘வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள், கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை, 5:30 மணிக்கு, மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, கொடிக்கம்பத்தில் இருந்து கொடி இறக்குதலுடன், பங்குனி உத்திர தேர்த்திருவிழா நிறைவடைந்தது. இதில், ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave a Reply