திருப்பூர் மாவட்டத்தில் ரூ.2.20 கோடி மதிப்பீட்டில், பத்து கிளை நுாலகங்கள் கட்டப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின், சென்னையில் இருந்தபடி, காணொலி காட்சி வாயிலாக, நுாலகங்களை திறந்துவைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில், காங்கயத்தில் நடைபெற்ற விழாவில், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், குத்துவிளக்கு ஏற்றினார். காங்கயம் நகராட்சி தலைவர் சூரிய பிரகாஷ், மாவட்ட நுாலகர் ராஜன், காங்கயம் தாசில்தார் மோகனன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
- அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில், 33 நுாலகங்கள் கட்டுவதற்காக, ரூ.7.26 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
காங்கயம் முழு நேர கிளை நுாலக இணைப்பு கட்டடம், திருமுருகன்பூண்டி, தாராபுரம், கொமரலிங்கம், குண்டடம், சாலக்கடை ஊர்ப்புற நுாலகம், நஞ்சைதலையூர் ஊர்ப்புற நுாலகம், காரத்தொழுவு ஊர்ப்புற நுாலகம், கணக்கம்பாளையம் கிளை நுாலகம், மங்கலம் ஊர்ப்புற நுாலகம் என, மொத்தம் ரூ.2.20 கோடி மதிப்பீட்டிலான, 10 நுாலகங்களை தமிழக முதல்வர் திறந்து வைத்துள்ளார்.
மாவட்டத்தில் தலா 22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 23 நுாலக கட்டடம் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இப்பணிகள் முடிவடைந்து, விரைவில் அந்த நுாலகங்களும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.புதிய நுாலகங்கள் திறக்கப்பட்டதன் வாயிலாக, இளைஞர்கள், மாணவர்கள் பயன்பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply