ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் திட்டம் அவ்வளவுதானா? இப்போதைக்கு கட்ட வாய்ப்பில்லை

கோவை; கோவையில் காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லுார் உள்ளிட்ட ஏழு இடங்களில் பஸ் ஸ்டாண்ட்டுகள் செயல்படுகின்றன.

 

வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்லும் பஸ்களும் நகர்ப்பகுதிக்குள் வந்து செல்வதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
அதற்கு தீர்வு காண, சென்னை கோயம்பேடு போல், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது.அ.தி.மு.க., ஆட்சியில், வெள்ளலுார் கழிவு நீர் பண்ணை வளாகத்தில், ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி துவக்கப்பட்டது.

‘மெட்ரோ ரயில்’ திட்டம் செயல்படுத்தும்போது, உக்கடத்தில் இருந்து ஆத்துப்பாலம், போத்தனுார் வழியாக வெள்ளலுாருக்கு இணைப்பும், வெள்ளலுாரில் இருந்து நீலாம்பூர் வழியாக, அவிநாசி ரோட்டை அடையும் வகையிலும், வழித்தடம் ஆராயப்பட்டது.

பணிகள் நிறுத்தம்

2021ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது, குப்பை கிடங்கு மற்றும் சாலை வசதியை காரணம் காட்டி, மொத்த காய்கறி மார்க்கெட் மாற்றும் லாரிப்பேட்டையாக மாற்றுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இனி, இப்பகுதியில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு திட்டமில்லை என்பதை, மறைமுகமாக சுட்டிக் காட்டுகின்றனர்.

ஏனெனில், ‘மெட்ரோ ரயில்’ திட்டத்தில், உக்கடத்தில் இருந்து வெள்ளலுார் வருவதற்கான வழித்தடம் இல்லை.பேஸ்-2 திட்டத்தில், திருச்சி ரோடு மற்றும் மேட்டுப்பாளையம் ரோடு எடுக்க வாய்ப்பிருக்கிறது என, திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தெற்கு பகுதி தவிர்ப்பு

பொள்ளாச்சி ரோடு, பாலக்காடு ரோடுகளை சேர்க்காமல், தெற்குப்பகுதி திட்டமிட்டே தவிர்க்கப்பட்டு இருப்பதாக, சந்தேகிக்கத் தோன்றுகிறது.
அதற்கு காரணம், ‘மெட்ரோ ரயில்’ திட்ட அறிக்கையில், நீலாம்பூர் அருகே, 36 ஏக்கரில் ‘மெட்ரோ டெப்போ’ அமைகிறது. அதன் அருகாமையில், 20 ஏக்கரில் பஸ் முனையம் அமைக்க முன்மொழியப்பட்டிருக்கிறது. அவிநாசி ரோட்டில் தற்போது கட்டப்படும் மேம்பாலம், நீலாம்பூர் வரை செல்ல இருக்கிறது. ‘மெட்ரோ ரயில்’ டெப்போ, விமான நிலையம் மற்றும் அதன் அருகிலேயே, பஸ் ஸ்டாண்ட் அமைய வேண்டும் என்கிற நோக்கத்தில், எதிர்காலத்தில் இப்பகுதிலேயே ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் உருவாக்க வாய்ப்பிருக்கிறது.

இதன் காரணமாக, தற்போதைக்கு நகர்ப்பகுதியில் உள்ள உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லுார் மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள பஸ் ஸ்டாண்ட்டுகளை, மாநகராட்சி சீரமைக்க உள்ளது.

எனவே, தற்போதைக்கு ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டுவதற்கு வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.