கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, வடசித்தூரில், 63 ஆண்டுகளாக பழமை மாறாமல் சோடா கடை நடத்தி வரும் நாச்சிமுத்து, சுற்று வட்டார பகுதிகளில் மிகவும் பிரபலம். சிறுவர் முதல் முதியோர் வரை இவரது சோடாவுக்கு ரசிகர்கள்.
சோடா தயாரிப்பில் ஈடுபட்டிருந்த நாச்சிமுத்து கூறியதாவது: இவர், 1937ல் நெகமம் பகுதியில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு கூலி வேலைக்கு சென்றேன். 1952 வரை விவசாயம் செய்தேன். குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிக்கு செல்லவில்லை. அதன் பின், 1952ல் விவசாய பணியை கைவிட்டு, நெகமம் அருகே உள்ள காளியப்பம்பாளையத்தில் சோடா கடையில் 1962 வரை வேலை செய்து, தொழிலை நன்றாக கற்றுக்கொண்டேன்.அதன்பின், சொந்தமாக தொழில் துவங்க நினைத்தேன். அதற்கு உறவினர்கள் ஓரளவு பண உதவி செய்தார்கள். மீதம் உள்ள தேவைக்கு வட்டிக்கு வாங்கி மொத்தமாக, 2 ஆயிரம் ரூபாய் சேர்த்தேன். அதன்பின் வடசித்தூர் பகுதியில் சொந்தமாக சோடா கடை துவங்கினேன்.
கொஞ்ச கொஞ்சமாக வருமானம் ஈட்டி, சிலிண்டர் மிசின், கோலி சோடா பாட்டில்கள் என தனியாக கொள்முதல் செய்தேன். கடையில் சோடாவை சொந்தமாக தயாரித்து, வடசித்தூர், நெகமம், பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் பிற பகுதிகளுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வந்தேன். நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்தது.ஒரு கட்டத்தில், 40 கடைகளுக்கு தினமும் சோடா சப்ளை செய்ய துவங்கினேன். இதற்காக, ஒரு மாட்டு வண்டி, 2 சைக்கிள் மற்றும் 2 மொபட் வாங்கி ஆட்கள் வைத்து தொழில் செய்தேன். இதற்கிடையே திருமணம், குழந்தைகள் என குடும்பம் பெரிதானது. அதன் பின் தொழிலை சிறப்பாக நடத்தி சொந்த வீடு கட்டினேன்.
ஒரு கட்டத்தில், குளிர்பானங்கள் (கூல் டிரிங்ஸ்) வருகை அதிகரிப்பால், சோடா கடையில் வருமானம் பாதித்தது. கடையில் பணியாற்றிய வேலை ஆட்கள் வேறு பணிகளுக்கு சென்றனர். நான் மட்டும், இந்த தொழிலை கைவிடாமல் இன்றும் நடத்தி வருகிறேன். வருமானம் அதிகமாக இல்லாவிட்டாலும், அன்றாட வாழ்கையை நகர்த்த வருமானம் போதுமானதாக உள்ளது. அதிக லாபம் இல்லை என்றாலும் நிறைவாக உள்ளது.
‘கூல் டிரிங்ஸ்’ வருகையால் பல சோடா கடைகள் மூடப்பட்டன. ஆனால் இந்தக் கடையை விட மனமில்லாமல் நடத்தி வருகிறேன். 1962ல் துவங்கிய கடை இப்போதும் அப்படியே உள்ளது. எதையுமே மாற்றம் செய்யவில்லை. சோடாவை நானே தயாரிக்கிறேன். எந்த கலப்படமும் இல்லை. வழக்கமாக வரும் நபர்கள் வந்து சோடா, கலர், எலுமிச்சை மற்றும் நன்னாரி சர்பத் போன்றவைகளை பருகி செல்கிறார்கள்.
10 பைசாவில் ஆரம்பித்த சோடா வியாபாரம், இன்று, 10 ரூபாயில் உள்ளது. தற்போது வரை கடைக்கு பெயர் வைக்கவில்லை. சோடா கடை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும். இவ்வாறு, கூறினார்.10 பைசாவில் ஆரம்பித்த சோடா வியாபாரம், இன்று, 10 ரூபாயில் உள்ளது. தற்போது வரை கடைக்கு பெயர் வைக்கவில்லை. சோடா கடை என்று சொன்னால் எல்லோருக்கும் தெரியும்.
Leave a Reply