கோவை: குற்றச்சம்பவங்களை குறைக்கும் வகையில், கடந்த மூன்று மாதங்களில், 61 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், 750க்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்கள் அந்தந்த பகுதிகளில் வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து, கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை அரங்கேற்றி வந்தனர். இதனால், குற்றச்சம்பவங்களை குறைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக சரவண சுந்தர் பொறுப்பேற்ற பிறகு, ரவுடிகளின் அட்டகாசத்தை குறைக்க, ‘மெட்ராஸ் சிட்டி போலீஸ் சட்டத்தை’ கோவைக்கு அறிமுகப்படுத்தினார்.
அதன் படி, முதற்கட்டமாக கடந்த ஜன., 13ம் தேதி 27 ரவுடிகளை மாநகரில் இருந்து வெளியேற உத்தரவிட்டார்.தொடர்நது, பிப்., 7ம் தேதி மேலும், 83 பேர் மாநகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
மாநகர பகுதிகளில் அடிதடி, வழிப்பறி, கொலை, கொலை முயற்சி, போதை பொருட்கள் விற்பனை போன்ற நபர்கள், கைது செய்யப்பட்டு சிறை சென்று, ஒரு சில மாதங்களில் திரும்பி வந்து, மீண்டும் அதே செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இதனை கவனித்த போலீசார், அதிரடியாக ‘குண்டாஸ்’ போட ஆரம்பித்தனர். அதன்படி, கடந்த ஜன., மாதம் முதல் ஏப்., 10ம் தேதி வரை 61 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் அதிகபட்சமாக ஏப்., 1ம் தேதி முதல் 10ம் தேதி வரை, 16 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. மார்ச் 11ம் தேதி முதல், 25ம் தேதி வரை 11 பேர் மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது.
கடந்தாண்டு ஜன., முதல் மார்ச் வரையிலான, குற்றச்சம்பவங்களை ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜன., முதல் மார்ச் வரை, குற்றச்சம்பவங்கள் குறைந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.அதன்படி, கடந்தாண்டு ஜன., முதல் மார்ச் 31வரை கொலை, கொள்ளை உட்பட 397 குற்றச்சம்பவங்கள் நடந்துள்ளன. அதே இந்தாண்டு, 227 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இது குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தரிடம் கேட்டபோது, ”மாநகர பகுதிகளில் குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும் நபர்கள், தொடர் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோர் மீதும், நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.மாநகரை அமைதியாக மாற்ற வேண்டும். சிறைக்கு சென்று வந்த பிறகும், தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வருவோரை கண்காணித்து, மாநகரை விட்டு வெளியேற்றி வருகிறோம். குற்றத்தடுப்பு நடவடிக்கையாக, தொடர் குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்படுகின்றனர்,” என்றார்.
Leave a Reply