பொள்ளாச்சி : கோடை சீசன் காரணமாக, ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக, வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வால்பாறை சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள நீர்தேக்கங்கள், அணைகள், கோவில்கள், தேயிலை தோட்டங்களால் சுற்றுலா பயணியர் ஈர்க்கப்படுகின்றனர். மேலும், வால்பாறையில் யானை, காட்டுமாடு, வரையாடு, குரங்குகளை நேரடியாக காண முடிவதால், அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர்.
தற்போது, கோடை சீசன் துவங்கியுள்ளதால், வழக்கத்துக்கு மாறாக சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. வழக்கமாக, ஆழியாறு சோதனைச்சாவடி வழியாக தினமும் ஆயிரத்துக்கும் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே சுற்றுலா பயணியர் வருகை இருக்கும். தற்போது, சராசரியாக, தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியர் வருகின்றனர்.இதனால், ஆழியாறு சோதனைச்சாவடியில் இருந்து வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியரிடம் பிளாஸ்டிக் பயன்படுத்த வேண்டாம்; மலைப்பாதையில் வாகனங்களை நிறுத்தி உணவு உட்கொள்வது, காலி உணவு பொட்டலங்களை திறந்தவெளியில் வீசி செல்வது, குரங்கு, வரையாடுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என, விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக, மழையின் தாக்கம் இருப்பதால், காட்டுத்தீ பரவல் இனி ஏற்படாது. இருப்பினும், சுற்றுலா பயணியரின் அத்துமீறலை தடுக்க, ஆங்காங்கே வனக்குழுவினர், கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சோதனைச்சாவடியில் வாகனங்கள் அனுமதிக்கப்படும்போது, பிளாஸ்டிக் பொருட்கள் இருக்கிறதா என, ஆய்வு செய்து, துணிப்பை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. அறிவுறுத்தலையும் மீறி, ரோட்டில் வாகனங்களை நிறுத்தி அத்துமீறலில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும்.அதேபோல, மாலை, 6:00 முதல் காலை, 6:00 மணி வரை, சுற்றுலா பயணியர், டூ வீலரில், மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை. இவ்வாறு, கூறினர்.
Leave a Reply