சூலுார்: பயன்பாட்டில் இல்லாத வறண்ட ஆழ்துளை கிணறுகள், மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை கண்டறிந்து அவற்றை புனரமைக்கும் பணியில் தன்னார்வலர்களுடன் மாவட்ட நிர்வாகம் கைகோர்த்து உள்ளது.ஜல் சக்தி அபியான் சி.டி.ஆர் 2025 திட்டத்தின் கீழ், கோவை மாவட்டம் முழுக்க நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் பொருட்டு, தன்னார்வலர்கள், தன்னார்வ அமைப்புகளுடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து களம் இறங்கியுள்ளது.ஜல் சக்தி அபியான் சி.டி.ஆர்.,( கேட்ச் தி ரெயின்) 2025 என்பது மழை நீரை சேகரித்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் சிறப்பு திட்டமாகும்.
இத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக, மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியத்திலும், ஒவ்வொரு ஊராட்சியிலும் உள்ள அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்களில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு உள்ளதா என, ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அரசு நிலத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை கண்டறியும் சர்வே பணி தன்னார்வலர்கள் உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், பெரிய தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லுாரிகள், வணிக வளாகங்களில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் உள்ளனவா எனவும் சர்வே செய்யும் பணி நடக்கிறது. இதற்காக, ஒவ்வொரு ஒன்றியம் வாரியாக தன்னார்வ அமைப்புகள், ஊராட்சி செயலர்கள், உள்ளூர் தன்னார்வலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் சர்வே பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சூலுார் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துராஜூ கூறியதாவது:
கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனரின் உத்தரவின் பேரில், அனைத்து ஊராட்சிகளில், அரசு மற்றும் தனியார் இடங்களில் உள்ள பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள், தன்னார்வலர் குழுவினால் கண்டறியும் பணி நடக்கிறது. அதேபோல் கட்டடங்கள், வீடுகளில் உள்ள மழை நீர் சேகரிப்பு அமைப்புகளும் கண்டறியப்பட்டு அவற்றை புனரமைத்து மழை நீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.மழை நீர் சேகரிக்க சாத்தியக்கூறு இருக்கும் அரசுக்கு சொந்தமான இடங்களில், அரசு செலவில், மழை நீரை சேகரிக்கும் வகையில் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளது.
தனியார் இடங்களில், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளை, அவர்களே மழைநீரை சேகரிக்கும் கட்டமைப்பை அமைக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு, நிறுவனங்களின் சமுதாய பங்களிப்பு நிதி வாயிலாக கட்டமைப்பு உருவாக்க உதவிகள் செய்யப்படும். இவ்வாறு, செய்வதன் மூலம், மழை நீர் வீணாகாமல், சேமிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர வழி ஏற்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மகத்தான திட்டம்:
ஒவ்வொரு துளி மழை நீரும் எதிர்கால சந்ததிக்கு முக்கியமாகும். அவற்றை நாம் இன்று சேமித்தால் தான், எதிர்காலத்தில் அவர்களுக்கு பயன் கிடைக்கும். மழை நீரை பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் சேமிக்கும் போது, அப்பகுதியை சுற்றிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயரும், என, தன்னார்வலர்கள் கூறினர்.
Leave a Reply