கோவை; அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லுாரியில் மாணவியர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இரண்டாம் சுழற்சியை ஏற்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கோவையில் புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. துவக்கத்தில், பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
640 மாணவியர் பயின்று வருகின்றனர். கல்லூரியில் சேரும் மாணவியரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மாணவியரின் வசதிக்காக பல்வேறு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில், கல்லுாரியில் பட்டமளிப்பு விழா நடத்தப்பட்டது.மாணவியர் எண்ணிக்கை உயர்ந்துள்ளதால், கூடுதல் பாடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, பி.ஏ. பொருளாதாரம் பாடப்பிரிவு துவங்கவும், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பாடபிரிவுகளுக்கான இடங்களை அதிகரிக்க, இரண்டாம் சுழற்சியில்(ஷிப்ட்) மாணவர் சேர்க்கை, நடப்பாண்டு முதல் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், ”கல்லூரியில், தற்போது இளநிலையில் ஐந்து பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. முதுகலை பாடப்பிரிவுகள் துவங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில், புதிதாக பி.ஏ., பொருளாதாரம், 40 இடங்களுடன் துவங்கப்பட உள்ளது. மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், இரண்டாவது ‘ஷிப்ட்’ அடிப்படையில், கம்ப்யூட்டர் சயின்ஸ், பி.காம்., பாடப்பிரிவுகள் நடத்த திட்டமிட்டுள்ளது. இவ்விரு பாடங்களிலும், கூடுதலாக 100 இடங்கள் வரை ஏற்படுத்தப்பட உள்ளது. அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறோம்,” என்றார்.
Leave a Reply