கோவை: திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் அனுப்பிரியா கோவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில் கோவையில் 1500 ரூபாய் திருடியதாக பழி சுமத்தியதால், மருத்துவ மாணவி, தனியார் மருத்துவமனையின் 4வது மாடியில் இருந்து குதித்து உயிரை விட்ட விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்கக்கோரி, சக மாணவர்கள் அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கூடத்தை முற்றுகையிட்டுள்ளதால் பரபரப்பு நிலவுகிறது.
சிலர் அவசரப்பட்டு விடும் வார்த்தைகள், சிலர் அவசப்பட்டு போடும் பழிகள், சிலர் அவசரப்பட்டு நடந்து கொள்ளும் விதம் எல்லாமே பெரிய இழப்பை ஏற்படுத்துகிறது. சிலரது முட்டாள்தனமான முடிவுகளும், சிலரது அழகான வாழ்க்கையை அழித்து விடுகிறது. தீர விசாரிக்காமல் ஒருவர் மீது திருட்டு பழி போடுவது என்பது பெரிய பிரச்சனையை உருவாக்கும்.. அப்படித்தான் கோவையில் நடந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் நாச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகள் அனுப்பிரியா (18). இவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில் ஆலைட் ஹெல்த் சயின்ஸ் முதலாமாண்டு பயின்று வருகிறார். பயிற்சிக்காக இவர் கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் மருத்துவமனையில் சேர்ந்திருந்தார். நேற்று, அனுப்பிரியாவுடன் பயிலும் மாணவி ஒருவரின் 1500 ரூபாய் பணம் மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனையில் உள்ள தங்குமிட கண்காணிப்பாளர், அனுப்பிரியாவின் உடமைகளை சோதனையிட்டதோடு, அவர் தான் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனுப்பிரியா, மருத்துவமனையின் 4வது மாடிக்கு சென்று, திடீரென அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பீளமேடு போலீசார், அனுப்பிரியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மாணவி இறந்த தகவல் பரவியதை தொடர்ந்து இந்துஸ்தான் மருத்துவமனையின் மருத்துவக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவ மாணவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனைக் கூடத்தின் முன்பு குழுமியுள்ளனர்.
மாணவி இறந்தது குறித்த உரிய தகவலை அளிக்க இந்துஸ்தான் மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும், மாணவியின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் சக மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் காரணமாக அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்: சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் – 044 -2464000 (24 மணி நேரம்) மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் – 104 (24 மணி நேரம்)
Leave a Reply