கோவை டூ நெல்லை! அரசு பஸ்சில் நள்ளிரவில் கண்டக்டர் செய்த காரியம்.. ஐடி இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை

கோவை: கோவையில் இருந்து நெல்லைக்கு சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில், நள்ளிரவு நேரத்தில் பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தபோது ஐடி நிறுவன இளம்பெண்ணை தொட்டு கண்டக்டர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை பேருந்து நிலையத்துக்கு பஸ் வந்ததும் பெண்ணின் குடும்பத்தினர் கண்டக்டரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.கோவையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இளம்பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு சொந்த ஊரான தூத்துக்குடிக்கு கிளம்பியிருக்கிறார். அப்போது கோவை டூ நெல்லை சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த போது அந்த இளம்பெண்ணுக்கு கண்டக்டர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் கண்டக்டரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.


நள்ளிரவில் இளம்பெண்ணை தொட்டு தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கோவையில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் அவர் ஊருக்கு திரும்பியிருக்கிறார். இதற்காக கோவையில் இருந்து நெல்லை சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பஸ்சில் கண்டக்டராக கோவையை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் பணியில் இருந்துள்ளார். நள்ளிரவு ஆனதால் பயணிகள் பலரும் தூங்கினர்.

இந்த நிலையில் பஸ் சென்று கொண்டிருந்த போது திடீரென கண்டக்டர் மகாலிங்கம் அந்த இளம்பெண்ணின் இருக்கை அருகே சென்றுள்ளார். இளம்பெண் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது மகாலிங்கம் அந்த பெண்ணை தொட்டு பாலியல் தொல்லை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் திடுக்கிட்டு எழுந்த அந்த இளம்பெண் அதிர்ச்சியடைந்தார்.

பெற்றோருக்கு போன் செய்த இளம்பெண் உடனே தன் பெற்றோருக்கு போன் செய்த இளம்பெண், இது பற்றி தன் அவர்களிடம் கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சிலரும் நெல்லை பஸ் நிலையத்துக்கு புறப்பட்டு வந்தனர். அதிகாலை 4 மணிக்கே அங்கு வந்துவிட்டனர். இதையடுத்து பஸ் வந்ததும், அந்த கண்டக்டரை பிடித்து இது பற்றி கேட்டனர். தொடர்ந்து இந்த சம்பவம் பற்றி மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன்பேரில் உடனடியாக இன்ஸ்பெக்டர் ரச்சிதா மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். உடனே அவர்கள் இளம்பெண்ணிடம் விசாரித்தனர். இதில் கண்டக்டர் மகாலிங்கம் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்டக்டரை கைது செய்தனர். ஓடும் பஸ்சில் ஐடி நிறுவன பெண்ணுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கண்டக்டரே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.