குளத்துக்கு நீர் திறக்க அரசாணை பெற்றது ஏற்புடையதல்ல! ஆழியாறு பாசன விவசாயிகள் ஆதங்கம்

ஆனைமலை; திட்டக்குழுவுக்கு தெரிவிக்காமல், பூசாரிநாயக்கன் குளத்துக்கு பாசன நீர் திறக்க அரசாணை பெற்றது ஏற்புடையதல்ல, என, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Latest Tamil News

ஆனைமலை அருகே, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசன சங்கத்தின் ஆலோசனை கூட்டம், ஆவல்சின்னாம்பாளையத்தில் நடந்தது. தலைவர் அசோக்குமார், செயலாளர் பிரபாகரன், பொருளாளர் முருகேசன், ஆழியாறு நீர் தேக்க திட்டக்குழு தலைவர் செந்தில் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், நடப்பாண்டில் பாசனத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நீரை, விவசாயிகளின் தேவையறிந்து சுழற்சி முறையில் முறையாக நீர் வழங்கிய நீர்வளத்துறை அதிகாரிகளுக்கும், பாசன சபைகளுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

பி.ஏ.பி., திட்டத்தில் அனைத்து பகுதிக்குமான நீர் வினியோகம், அந்தந்த நீராண்டுக்கு உட்பட்ட ஜூன் முதல் மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும்.

மாறாக நடப்பாண்டில் திருமூர்த்தி மூன்றாம் மண்டல பாசனத்துக்கான அரசாணை, ஜூன் மாதம் வரை பெற்றுள்ளது. எந்த அடிப்படையில் இந்த அரசாணை பெறப்பட்டது என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.

பாசன பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு நீர் திறப்பானது, அணைகள் நிரம்பி உபரிநீர் வரும் போது அல்லது பாசன நீர் நிறுத்திய பிறகே வழங்க வேண்டும்.

ஆனால், திருமூர்த்தி பாசனத்தின் இரண்டாம் மண்டலம் நிறைவடைந்தவுடன், மூன்றாம் மண்டலத்துக்கு நீரை சேமிக்காமல், வட்டமலைக்கரை, உப்பாறுக்கு நீர் திறந்ததால் ஜூன் மாதம் வரை பாசன காலம் நீட்டிக்க வேண்டியுள்ளது.
மேலும், தற்போது பூசாரி நாயக்கன் குளத்துக்கு, திட்டக்குழுவுக்கு தெரிவிக்காமல் பாசன நீர் செல்லும் போது அரசாணை பெற்றது ஏற்புடையதல்ல. வரும் ஆண்டுகளில் அதீத அழுத்தத்தால் ஏற்படும் இது போன்று சிக்கல்கள் நிகழாமல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழியாறு புதிய ஆயக்கட்டு பாசனத்துக்கு நடப்பாண்டில், ஒதுக்கீடு செய்யப்பட்ட, 2,709 மில்லியன் கனஅடி நீரை முழுமையாக திட்ட தொகுப்பில் இருந்து ஆழியாறு அணைக்கு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

வேலை உறுதியளிப்பு திட்ட பணியாளர்கள் வாயிலாக நடைபெறும், பாசன கிளை கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணியின் போது, அதிகமான ஆட்கள் தேவை மற்றும் பணிச்செய்யும் காலமும் அதிகரிப்பதோடு பணிகளும் தரமாக நடப்பதில்லை.

எனவே, அரசால் தேர்வு செய்யப்பட்ட பாசன சபைக்கு, சபை வாரியாக கால்வாயை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.