‘பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால் மிரட்டல் அரசு பணியாளர்கள் குற்றச்சாட்டு

மேட்டுப்பாளையம்; ‘ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் கார்களில் இருந்து பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்தால் மிரட்டுகிறார்கள்’ என்று அரசு பணியாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.கோடை சீசன் துவங்கியதை அடுத்து, ஊட்டிக்கு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. வார நாட்களில், 6000, சனி, ஞாயிறு நாட்களில் தலா, 8000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது.

Latest Tamil News

இதை கண்காணிக்க, நீலகிரி மாவட்ட நிர்வாகம், மாவட்டத்தின் நுழைவுப் பகுதிகளில், ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைச் சாவடிகளை அமைத்து, அரசு அலுவலர்களை பணியில் அமர்த்திஉள்ளது. இவர்கள், சுற்றுலா வாகனங்களை நிறுத்தி இ–பாஸ் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். இது குறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது: மேட்டுப்பாளையம் வழியாக தினமும் வார நாட்களில், 1,000 வண்டிகளும், சனி, ஞாயிறு நாட்களில், 1,300 வாகனங்களும், ஊட்டிக்கு செல்கின்றன. இதில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சிலர், இ–பாஸ் எடுக்காமல் வருகின்றனர். அவர்களுக்கு உடனடியாக இங்கு இ–பாஸ் எடுத்துக் கொடுக்கப்படுகிறது. விடுமுறை நாளான, சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும், அதிகமான வாகனங்கள் வருகின்றன. ஆனால் இதுவரை யாரையும் திருப்பி அனுப்பவில்லை. ஒவ்வொரு நாளும் மாலை வரை இ–பாஸ் தடையில்லாமல் வழங்கப்படுகிறது. பள்ளிகளுக்கு விடுமுறை விடும்போது, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாகனங்களை சோதனை செய்யும் பணியில், நான்கு பேர் மட்டுமே உள்ளனர்.வாகனங்கள் அதிகளவில் வரும்போது, ஒவ்வொரு வாகன இ–பாஸையும் ஸ்கேன் செய்யும் போது, நீண்ட நேரம் ஆகிறது. அப்போது வாகன ஓட்டுநர்கள் நேரம் ஆகிறது என்று சத்தம் போடுகின்றனர். அதனால் மாவட்ட நிர்வாகம் கூடுதலாக பணியாளர்கள் நியமனம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மிரட்டல்:

வாகனங்களில் தண்ணீர் பாட்டில்கள் உள்ளதா என, சோதனை செய்யும் பணியில் ஈடுபடும், அரசு பணியாளர்கள் கூறியதாவது: பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை, நீலகிரி மாவட்டத்திற்குள் எடுத்து வரக்கூடாது என, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
அதையும் மீறி கொண்டு வந்தால், ஒரு பாட்டிலுக்கு, 20 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என அறிவித்துள்ளார். கலெக்டர் உத்தரவுபடி, நாங்கள் சோதனை செய்கிறோம்.

சோதனையின்போது பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்தால், காரில் உள்ளவர்கள் எங்களுக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.,வை தெரியும். அதனால் போக விடுகிறீர்களா இல்லையா என பேசி உங்களை என்ன செய்கிறோம் பார் எனவும் மிரட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.