கோவை: கோவையில் முதலீடு செய்ய, கொரிய தொழில்முனைவோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக, வேளாண் துறை சார்ந்த இயந்திர தயாரிப்பு ஆலைகளை, நிறுவுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றனர். கொரிய வர்த்தக – முதலீட்டு மேம்பாட்டு முகமையான, ‘கோட்ரா’வின் தலைமை இயக்குநர் ஜிவான் யூன், சென்னையில் உள்ள கொரிய தூதர் சாங் யுன் கிம், தூதரக அதிகாரி கிம் பாடா, சென்னை கொரிய தூதரக அலுவலகத்தின் ஆய்வாளர் இந்துஜா அரவிந்த் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர், கோவைக்கு கடந்த வாரம் வந்தனர்.இக்குழுவினர், இந்திய தொழில் வர்த்தக சபை – கோவை, கொடிசியா உள்ளிட்ட தொழில் அமைப்பினருடன் கலந்துரையாடினர்.
வாய்ப்புகள் குறித்து ஆய்வு
‘காரவன் 2025’ என்ற பெயரில், முதலீட்டு பயணம் மேற்கொண்ட இக்குழுவினர், கோவை மற்றும் சுற்றுப்பகுதியில் வேளாண் இயந்திர உற்பத்தியில், கொரிய உற்பத்தி நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளை ஆய்வு செய்தனர்.
கோவையின் தொழில்முனைவுத் திறன், உள்கட்டமைப்பு, பணிச்சூழல் ஆகியவை தங்களது முதலீட்டை இங்கு மேற்கொள்வதற்கு சாதகமான சூழல் நிலவுவதை அறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் துவக்க உள்ளனர்.
கோவை, ஊட்டி சுற்றுப்பகுதிகளை ஆய்வு செய்து, நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்தனர். மிக விரைவில், கொரிய தொழில் முனைவோர் கோவையில், வேளாண் இயந்திர உற்பத்தியில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளதாக, தொழில்துறையினர் மத்தியில் பேச்சு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, கொடிசியா தலைவர் கார்த்திகேயனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
2024ம் ஆண்டு, ‘கொடிசியா’வில் அக்ரி இன்டெக் கண்காட்சி நடந்தது. இதில், ‘காமிகோ’ கொரியா வேளாண் இயந்திர தொழில்துறை கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், ஸ்டால்கள் அமைத்திருந்தனர்.
அப்போது, கோவையின் தொழில்முனைவுத் திறன் அவர்களை வியக்க வைத்தது. வேளாண் இயந்திரங்களுக்கான வரவேற்பும், அவர்களுக்கு பெருமகிழ்ச்சி அளித்தது. இதையடுத்து, காமிகோ உறுப்பினர்கள், கோவையில் முதலீடு செய்ய முன்வந்துள்ளனர்.
தேவை தொழிற்பூங்காக்கள்
கோவையில் தொழில் வளர்ச்சியை விரிவுபடுத்த, பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மாநில அரசிடம் கோரியுள்ளோம். குறிப்பாக, தொழிற்பூங்காக்கள் அமைப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளோம்.
பெரியநாயக்கன்பாளையம், அன்னூர், வாகராம்பாளையம், கருமத்தம்பட்டி, காரணம்பேட்டை, செலக்கரிச்சல், பாலத்துறை, மதுக்கரை, செட்டிபாளையம் ஆகிய கோவை மற்றும் திருப்பூரின் புறநகர்ப் பகுதிகளில் தலா, 200 ஏக்கர் பரப்பில் தொழிற்பூங்கா அமைக்க வேண்டும் எனக் கோரியுள்ளோம்.
கொடிசியா போன்ற நிறுவனங்களால், நிலம் வாங்கி தொழிற்பூங்காக்களை அமைப்பது சிரமம். எனவே, அரசே முன் வர வேண்டும்.
தரிசு நிலங்களை அடையாளம் கண்டு அவற்றை, தொழிற்சாலைகளுக்கான பகுதி என, வகைமாற்றம் செய்து அறிவிக்க வேண்டும்.
கிடங்கு வசதி வேண்டும்
வனவிலங்குகள் நடமாட்டமில்லாத, ‘ஹாக்கா’ என வரையறை செய்யப்பட்ட இடங்களை மறு ஆய்வு செய்து, அவற்றை கோவையின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கிடங்கு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.
இதுபோன்ற வசதிகளை மேம்படுத்துவதன் வாயிலாக, உள்ளூர் தொழில்துறையினரும் பயன்பெறுவர், வெளிநாட்டு நிறுவனங்களின் வருகை மற்றும் முதலீடு காரணமாக, வேலைவாய்ப்பு பெருகுவதுடன், தொழில்நுட்ப பரிமாற்றங்களும் நிகழும்.
அரசு இதனைக் கருத்தில் கொண்டு, துரித முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
Leave a Reply