கோவை : வெள்ளலுார் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்ய,போராட்டம் வலுத்துவரும் நிலையில்குப்பையுடன், இறைச்சி கழிவுகளும்பாதிப்பை கூட்டியுள்ளதாக, அப்பகுதி மக்கள் கொந்தளிக்கின்றனர்.
கோவை மாநகராட்சியின், 100 வார்டுகளிலும் மக்கும், மக்காதது, இ-வேஸ்ட் என, தினமும், 1,250 டன் வரையிலான குப்பை சேகரமாகிறது. இக்குப்பை, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளலுார் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டதால், அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடு பிரச்னைகளுக்குஆளாகி வருகின்றனர்.
துர்நாற்றம், ஈ தொல்லை போன்ற பாதிப்புகளை மக்கள் சந்திக்க, பிரச்னை தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வரை சென்றுவிசாரணையும் நடக்கிறது. வெள்ளலுாருக்கு குப்பை வருவதை தடுத்து, அந்தந்த மண்டலங்களிலேயே குப்பை மேலாண்மை செய்ய அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இச்சூழலில், குப்பை கழிவோடு, இறைச்சி கழிவுகளும் அப்பகுதி மக்களுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. மாநகரில் சேகரமாகும் இறைச்சிக் கழிவுகளை, குப்பை கிடங்கு வளாகத்தில் குழி தோண்டி புதைப்பதால், நிலத்தடி நீர் பாதிக்கக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக, அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.
இதுதொடர்பாக, மாசு கட்டுப்பாட்டு வாரியம் நேரில் ஆய்வு செய்யுமாறு, குறிச்சி-வெள்ளலுார் மாசு தடுப்பு கூட்டுக்குழுவினர் முறையிட்டு வருகின்றனர்.
குப்பை கிடங்கில், இறைச்சி கையாள அமைக்கப்பட்ட யூனிட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், மேலாண்மை செய்ய அனுமதிக்கப்பட்ட நிறுவனத்தை, மாநகராட்சி ரத்து செய்தது.
சமீபத்தில், கோழிக்கழிவு பிரச்னை தலைதுாக்க, மதுரை, மேட்டுப்பாளையத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு, வரும் காலங்களில் அனுப்பி வைக்கப்படும் என, மாநகராட்சி நிர்வாகef உறுதி அளித்திருந்தது.ஆனால், நேற்று டன் கணக்கிலான இறைச்சி கழிவுகள், வெள்ளலுார் குப்பை கிடங்குக்கு, மாநகராட்சி வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டது, அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply