கூடலுார் : முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் குறித்து சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்ளும் வகையில், சூழல் சுற்றுலா வழிகாட்டி நியமித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் யானைகள் வளர்ப்பில் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது.
இங்கு குட்டி யானைகள், அவற்றை பராமரிக்கும் பாகன் தம்பதி இடையேயான பாச பிணைப்பினை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கன்சால்வஸ் இயக்கிய, ‘தி எலிபென்ட் விஸ்பரர்ஸ்’ ஆவண படத்துக்கு சிறந்த ஆவண படத்துக்கான ஆஸ்கார் விருது கிடைத்தது.
ஜனாதிபதி, பிரதமர் முதுமலைக்கு நேரில் வந்து, ஆவண படத்தில் இடம்பெற்ற குட்டியானைகளை பார்த்ததுடன், பாகன் தம்பதியை சந்தித்து பாராட்டி சென்றனர்.
மேலும், பாகன் தம்பதியை தமிழக முதல் ஸ்டாலின் அழைத்து பாராட்டி வெகுமதியும் வழங்கினார். இதனால், தெப்பக்காடு யானைகள் முகாம் உலக அளவில் பிரபலமானது. சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள், யானைகள் முகாம், வளர்ப்பு யானைகள் பின்னணி குறித்து அறிந்து கொள்வதில் சிரமப்பட்டனர். இந்நிலையில், யானைகள் முகாம், வளர்ப்பு யானைகள் குறித்தும் சுற்றுலா பயணிகள் அறிந்து கொள்வதற்காக, வனத்துறை சார்பில், பிரதீஷ் என்ற சூழல் சுற்றுலா வழிகாட்டியை நியமித்துள்ளனர். அவர், முகாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு, காலை, 8:30 மணி முதல் 9:30 வரையும்; மாலை, 5:30 முதல் 6:30 வரையும், யானைகள் முகாம் குறித்தும், யானைகள் வளர்ப்பின் பின்னணி குறித்தும் விளக்கம் அளித்து வருகிறார்.
முதுமலை துணை இயக்குனர் வித்யா கூறுகையில், ”இங்கு வரும் சுற்றுலா பயணிகள், யானைகள் முகாம் குறித்தும், வளர்ப்பு யானை பின்னணி, அவைகளுக்கு வழங்கப்படும் உணவு, பராமரிப்பு முறைகள் குறித்தும் முழுமையாக அறிந்து செல்லும் வகையில், சூழல் சுற்றுலா வழிகாட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ஆங்கிலம், தமிழில் விளக்கம் அளிப்பதால் சுற்றுலா பயணிகள் தெப்பக்காடு யானை முகாம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள முடிகிறது,” என்றனர்.
Leave a Reply