‘டாக்டர் பரிந்துரையின்றி, மருந்து கொடுக்கக்கூடாது’ போலீசார் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: ‘மருத்துவர்கள் பரிந்துரையின்றி, மருந்து கொடுக்கக்கூடாது’ என்று மருந்து கடைகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜிம்களில் உடற்பயிற்சி செய்வோரில் சிலர் உடற்பயிற்சியை சோர்வின்றி அதிக நேரம் செய்வதற்காக ஜிம் பயிற்சியாளர்கள் தரும் ஊக்க மருந்துகள், புரோட்டின் பவுடர்களை எந்த வித கட்டுப்பாடும் இன்றி உட்கொள்வதாக புகார் எழுந்துள்ளது.

Latest Tamil News

இதனை தடுக்கும் பொருட்டு, கோவை மாவட்ட ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் அறிவுறுத்தலின்படி ஊரகப்பகுதிகளில் உள்ள பெரியநாயக்கன்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை உட்கோட்டங்களில் மருத்துவர்கள் பரிந்துரையின்றி, மருந்து கடைகளில் மருந்துகளை கொடுக்கக்கூடாது.

ஆன்லைன் வாயிலாக தடை செய்யப்பட்ட மருந்துகள், ஊக்க மருந்துகளை கூரியர் வாயிலாக வழங்கக்கூடாது, என கூரியர் சர்வீஸ் உரிமையாளர்கள், மருந்து கடை உரிமையாளர்களுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ஜிம் உரிமையாளர்களுக்கு போலீசார் ஆலோசனை வழங்கினர். இதுகுறித்து, மேட்டுப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமணன் கூறுகையில் ‘ஜிம்களில் உடற்பயிற்சி செய்ய வருவோருக்கு, மருத்துவர்கள் பரிந்துரை இன்றி ஊக்க மருந்துகள் கொடுக்கக் கூடாது. இதனை மீறும் பட்சத்தில் ஜிம் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் வாயிலாகவும் மருத்துவர்கள் பரிந்துரை இன்றி எந்த மருந்துகளையும் வாங்க கூடாது’ என்றார்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறுகையில், இயற்கை உணவே என்றும் சிறந்தது.புரோட்டின் பவுடர்கள், ஊக்க மருந்துகளை எந்த வித கட்டுபாடும் இன்றி தங்களது இஷ்டத்திற்கு உட்கொள்வதினால், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உள் உறுப்புகள் பல கடுமையாக பாதிக்கப்படுகிறது’ என்றார்.