வால்பாறை : பதிக்கும் பணிக்கு ஒதுக்கிய நிதி போதுமானதாக இல்லாததால், பணி பாதியில் கைவிடப்பட்டுள்ளது. கூடுதல் நிதி ஏப்போது வரும் என, அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
வால்பாறை நகருக்கு, 8 கி.மீ., தொலைவில் உள்ள அக்காமலை செக்டேமில் இருந்து, குழாய் வாயிலாக குடிநீர் கொண்டு வரப்பட்டு, தொட்டியில் தேக்கி வைத்து, வீடு மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். பழைய குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், நகரில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது.
இதனிடையே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அக்காமலை செக்டேமில் இருந்து வால்பாறை நகர் வரை, பழைய குழாய்களை மாற்றி புதிய குழாய் அமைக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.
ஆனால், பணி ஆமை வேகத்தில் நடப்பதாலும், நெடுஞ்சாலைத்துறை ரோட்டை சேதப்படுத்தி குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் பல்வேறு இடங்களில் மூடப்படாமல் உள்ளதாலும், எஸ்டேட் தொழிலாளர்களும், வாகன ஓட்டுநர்களும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
வால்பாறை நகராட்சியை பொறுத்தவரை, எந்த வளர்ச்சிப்பணிகளும் முறையாக செய்வதில்லை. எந்த பணியாக இருந்தாலும், அதை பாதியில் நிறுத்திவிட்டு, வேறு பணிகளை செய்கின்றனர். பணி முழுமையடையாததால், சிரமத்துக்குள்ளாகிறோம்.
தென்மேற்குப்பருவ மழைக்கு முன், குழாய் பதிக்கும் பணி நிறைவடைந்தால் மட்டுமே இந்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது. இதை கருத்தில் கொண்டு நகராட்சி அதிகாரிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
வால்பாறையில் புதிய குழாய் பதிக்கும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது. ஆனால், கருமலையிலிருந்து பச்சமலை, நடுமலை வழியாக வால்பாறை நகருக்கு வரும் வழியில், சில இடங்களில் பாறைகள் உள்ளதாலும், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாலும் பணி தாமதமானது.
ஏற்கனவே ஒதுக்கிய நிதி பற்றாக்குறையாக இருப்பதால், பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் நிதிக்கு மன்ற ஒப்புதல் பெற்ற பின், கிடப்பில் போடப்பட்ட பணிகள் விரைவில் துவங்கப்படும்.
இவ்வாறு, கூறினர்.
Leave a Reply