கோவை : கோவையில் பெய்து வரும் மழையால், வெள்ளலுார், குறிச்சி, உக்கடம், நரசாம்பதி உள்ளிட்ட குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால், மாவட்டத்தின் சுற்றுப்பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பிருக்கிறது.நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை, ஒரு வாரம் முன்னதாக, மே 24ல் துவங்கியது. கோவை நகர் பகுதியில் அவ்வப்போது பெய்து வந்தாலும், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் பரவலாக பெய்து வருகிறது.

சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு மற்றும் அடிவாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்கிறது. சிற்றருவிகள் வாயிலாகவும் மழை நீர் வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.கடந்த மூன்று நாட்களாக ஆற்றில் தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களுக்கும் திருப்பி விடப்பட்டிருக்கிறது. உக்குளம், புதுக்குளம், கோளரம்பதி குளங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. தற்போது நரசாம்பதி, வெள்ளலுார் மற்றும் குறிச்சி, உக்கடம் பெரிய குளம் நிரம்பியுள்ளன. குனியமுத்துார் செங்குளத்துக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. சொட்டையாண்டி குட்டை, கங்கநாராயண் சமுத்திரம் ஆகிய இரட்டை குளங்களில் 80 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்துக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணாம்பதி குளத்துக்கும் தண்ணீர் செல்கிறது. நாகராஜபுரம் வாய்க்கால் நேரடியாக கழிவு நீர் கலப்பதால், அதை கடந்து குளத்துக்கு மழை நீர் வருவதற்கு சிரமம் ஏற்படுகிறது. கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் குளம் மற்றும் செல்வசிந்தாமணி, வாலாாங்குளம் மற்றும் சிங்காநல்லுார் குளங்களில் கழிவு நீரே தேங்கியிருக்கிறது. செப்., வரை தென்மேற்கு பருவ மழை பெய்ய வாய்ப்பிருப்பதால், மேற்கண்ட குளங்களில் உள்ள கழிவு நீரை வெளியேற்றி விட்டு, மழை நீரை தேக்க வேண்டும்.
இதேபோல், வெள்ளலுார் குளம் நிரம்பியதும் நொய்யல் ஆற்றுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது. இக்குளத்தில் அருகாமையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வெளியேற்றும் கழிவு நீர் சேர்ப்பிக்கப்படுகிறது. அதனால், பழைய நீரை வெளியேற்றி விட்டு, புது நீரை தேக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
ததும்புது… புதுவெள்ளம் நிரம்புது
பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘குளங்களில் தேங்கியுள்ள பழைய நீரை வெளியேற்றி விட்டு, புதுவெள்ளம் நிரப்பி வருகிறோம். புதுத்தண்ணீர் குளத்துக்குள் நுழையும் அளவுக்கு ஏற்ப, பழைய கழிவு நீர் வெளியேறும். கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் கழிவு நீர் அடர்த்தி அதிகமாக இருப்பதால், வாய்க்காலில் வரும் வெள்ளம் வந்தடைவதற்கு தாமதம் ஏற்படுகிறது. குளங்களில் தண்ணீர் தேக்கப்படுவதால், சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்’ என்றனர்.
Leave a Reply