கோவை பழைய மாநகராட்சி பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம் (யு.ஜி.டி.,) செயல்பாட்டில் உள்ளது. பாதாள சாக்கடைக்கு கான்கிரீட் மூடிகளுடன் அமைக்கப்படும் ‘மேன் ஹோல்’ அமைப்பானது, சில இடங்களில் ரோட்டில் மேடாகவும், வேறு சில இடங்களில் அதிக பள்ளமாகவும் அமைக்கப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.பத்து ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இடங்களில், இந்நிலை காணப்படுகிறது. சுந்தராபுரம் – மதுக்கரை மார்க்கெட் மெயின் ரோடு, அண்ணா நகர், அன்னை இந்திரா நகர், வேலாண்டிபாளையம், வடவள்ளி, ரேஸ்கோர்ஸ், சிங்காநல்லுார் அருகே கள்ளிமடை, காட்டூர், இப்படிப்பட்ட அவலத்தை காணமுடியும். தவிர, சவுரிபாளையம், உடையாம்பாளையம், பொன்னையராஜபுரம், சரவணம்பட்டி, வடகோவை என, மாநகரின் போக்குவரத்து மிகுந்த ரோடுகளில், இந்த ‘மேன் ஹோல்’ அமைப்பு, வாகன ஓட்டிகளை திணறடிக்கிறது.பல இடங்களில், பாதாள சாக்கடையில் பொருத்தப்பட்டுள்ள, சிமென்ட் கான்கிரீட் மூடிகள் சிதைந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. சல்லடை போல் காட்சியளிக்கும் இம்மூடிகள் வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி, ரோட்டை கடப்பவர்களுக்கும் விபத்து அபாயத்தை கூட்டுகிறது. மேலும் மழை காலங்களில் இவற்றிலிருந்து கழிவு வெளியேறி சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது.

குறிப்பாக, கோவை அரசு கலை கல்லுாரியின் கேட் அருகே நடுரோட்டில், பாதாள சாக்கடை மூடி அமைந்துள்ள இடம், பெரும் பள்ளமாக உள்ளது. தினமும் இந்த இடத்தில் விபத்து ஏற்படுகிறது. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில், வெள்ளம் தேங்கி விட்டால், அங்கு இந்த மூடி அபாயங்கள் வெளியே தெரியாது. இரு சக்கர வாகனங்களில் வருவோர், கட்டாயம் விபத்துக்கு ஆளாவர். அதற்கு முன், மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக தீர்வு காண வேண்டும்.
Leave a Reply