கலெக்டரிடம் அளித்த மனுவின் நிலை; விரைவில் வருகிறது ‘பார்கோடிங்’ வசதி

கோவை; விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கும் மனுக்கள் மீது, ‘பார்கோடிங் ‘வசதி ஏற்படுத்தப்படவுள்ளது. இதன் வாயிலாக, மனுக்களின் முழுமையான நிலையை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இந்த வசதி விரைவில் நடைமுறைக்கு வருகிறது.ஒவ்வொரு மாதமும், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும் மனுக்களை பெறும் அதிகாரிகள், அதை பதிவேட்டில் பதிவு செய்து, பின் கம்ப்யூட்டரில் பதிவு செய்கின்றனர்.ஒவ்வொரு முறையும் சிரமம்


விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள, ஒவ்வொரு முறையும் கம்ப்யூட்டரில் உள்ளீடு செய்து, அதன் தன்மையை தெரிந்து கொண்டு, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கின்றனர். இதற்காக அவர்கள் கோப்புகளை மட்டுமின்றி, கம்ப்யூட்டரையும் கையாள வேண்டியுள்ளது.

தகவல்தொடர்பு வசதிகள் பல இருந்தும், சரியான தகவல்கள் சரியான நேரத்துக்கு சம்மந்தப்பட்டவர்களை சென்றடைவதில், சுணக்கம் ஏற்படுகிறது.

வருகிறது பார்கோடிங்


இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விவசாயிகள் கொடுக்கும் விண்ணப்பங்களை அலுவலர்கள் பெற்று பதிவு செய்யும் போதே, விண்ணப்பத்தின் மீதும், விண்ணப்பதாரருக்கு வழங்கும் ஒப்புகை சீட்டின் மீதும், ‘பார்கோடிங்’ ஸ்டிக்கரை ஒட்டிவிட்டால் போதும். அதை ‘ஸ்கேன்’ செய்தால் விண்ணப்பத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். இந்நடைமுறையால் விண்ணப்பதாரர்கள், கையாளும் அலுவலர்கள், அதிகாரிகள் ஆகிய மூன்று தரப்பினரும் பயன்பெறலாம். இந்நடைமுறை, விரைவில் கோவையில் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்படஉள்ளது.