கோவை; கடந்த 2022 முதல் ஆண்டுதோறும் ஜூலை 1ம் தேதி, மின்கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டும் இன்று முதல், 3.16 சதவீதம் தொழில்துறைக்கு மின் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.’தொடர் மின்கட்டண உயர்வு என்பது, தொழில்துறை மீது அரசு தொடுக்கும் போர். தொழில்துறையை மின்வாரியம் நசுக்குகிறது; எங்களின் விழி பிதுங்குகிறது’ என, தொழில் அமைப்புகள் வேதனை தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, கோவை அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ஜெயபால் கூறியதாவது:

தமிழகத்தில் 43 லட்சம் குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்கள் (எம்.எஸ்.எம்.இ.,) உள்ளன. இவற்றில், 11.60 லட்சம் உற்பத்தித் துறை சார்ந்தவை. சேவைத் துறை மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. சேவைத் துறை எம்.எஸ்.எம்.இ.,களின் எண்ணிக்கையைக் காட்டி, தொழில்துறை வளர்ந்து வருவதாக, தமிழக அரசு கூறி வருகிறது.
தமிழகம் தள்ளாடுகிறது
கடந்த 5 ஆண்டுகளாக உற்பத்தித் துறை நிறுவனங்கள் குறைந்து வருகின்றன. தமிழகத்தில் புதிய தொழில்கொள்கையே அறிவிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்கள் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கின்றன. நாம் தள்ளாடுகிறோம்.
கடந்த 2022ல் இருந்து 59.61 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மீண்டும் 3.16 சதவீதம் உயர்த்தினால், 63 சதவீதம் ஆகிவிடும். எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு உயர்த்தபடவில்லை.
மஹா., முதல்வர் தற்போது 10 சதவீத மின் கட்டணத்தைக் குறைத்துள்ளார். படிப்படியாக 26 சதவீதம் வரை குறைக்கப்படும் என அறிவித்துள்ளனர். அங்குதானே தொழில்துறை வளரும்?
‘அப்பா’ ஆக் ஷன் எடுக்கலை
தமிழகத்தை முதன்மை மாநிலம் ஆக்குவதே முதல்வரின் கனவு என்கிறார்கள். ஆனால், தொழில்துறை மீது போர் தொடுத்துள்ளனர். மின்வாரியம் ரூ.1.58 லட்சம் கோடி கடனில் இருக்கிறது.எங்கள் குறைகள் குறித்து, முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினால், அந்த மனுவை, புகாருக்கு ஆளான துறைக்கே அனுப்பி வைக்கும் தபால்காரர் வேலையை, முதல்வரின் தனிப்பிரிவு செய்கிறது.
அதிகாரிகளால் தீர்க்க முடியாததைத்தான் அரசுக்கு, முதல்வருக்கு அனுப்புகிறோம். ‘அப்பா’வின் ஸ்தானத்தில் இருந்துதானே முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு தவறான தகவல்
வெளிநாட்டு நிறுவனங்கள் வருவதை கணக்கு காட்டி, இங்கிருக்கும் நிறுவனங்கள் நலிவடைவதை கண்டுகொள்ளாமல், தொழில்துறை வளர்ச்சி அடைந்து வருவதாக, தமிழக அரசு தவறான தகவல்களைப் பரப்பி வருகிறது.
தொழில்துறையினர் விழிபிதுங்கி நிற்கிறோம். 2011ல் தி.மு.க., ஆட்சியை இழந்ததற்கு மின்சாரம்தான் காரணம். இம்முறையும் மின்வாரியம்தான் காரணமாக இருக்கப்போகிறது. தொழில்துறையினரின் ஒட்டுமொத்த அதிருப்தியையும், அரசு சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சிகளும் பெயரளவுக்கு போராட்டங்களை அறிவித்து விட்டு, ஒதுங்கிக் கொள்கின்றன. தமிழக தொழில்துறை நாதியற்றுப் போய்விட்டது. தமிழக தொழில்அமைப்புகளே ஒன்று சேர்ந்து அரசியல் கட்சி துவக்கினால்தான், பதில் கிடைக்கும் என நினைக்கிறோம்.
வலுவாக இருக்கும் தமிழக தொழில்துறை கட்டமைப்பை, ஒவ்வொரு செங்கல்லாக உருவிக் கொண்டுள்ளனர். இப்படியே தொடர்ந்தால், நிலைகுலைந்துவிடும். மீண்டும் கட்டமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
எங்களிடமே விற்பனை!
”நாங்களே சோலார் மேற்கூரை மின் உற்பத்தி செய்தால், ஊக்குவிக்காமல், யூனிட்டுக்கு 1 ரூபாய் கட்டணம் விதிக்கிறது. வெளியில் யூனிட் ரூ.12க்கு வாங்குகிறது. எங்களிடம் ரூ.3.10க்கு வாங்கி, எங்களுக்கே ரூ.9.50க்கு விற்பனை செய்கிறது. அதாவது, மேற்கூரை சோலார் மின் உற்பத்தி செய்ய யாரும் முன்வரக்கூடாது என்ற திட்டத்தோடு மின்வாரியம் செயல்படுகிறது. மின்சார ஒழுங்குமுறை ஆணையம் செயலிழந்து விட்டது. மின்வாரியமும் தவறு செய்கிறது,” என்றார் ஜெயபால்.
Leave a Reply