கலெக்டரிடம் ‘பழசுக்கு புதுசு’ கேட்டு மூதாட்டி கோரிக்கை

கோவை; கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் தங்கமணி,78. இவர் செல்லாத ஆயிரம் ரூபாய் நோட்டு மற்றும், 500 ரூபாய் நோட்டுகளுடன், கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: என் மகன் லாரி டிரைவராக பணிபுரிந்தார். கடந்த மூன்றாண்டுக்கு முன்பு இறந்து விட்டார். சமீபத்தில் வீட்டை சுத்தம் செய்த போது, அவர் வைத்திருந்த பேக்கில் பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன.

மத்திய அரசு, செல்லாது என அறிவித்தது. ஆனால் இதில் 15,000 ரூபாய் உள்ளது.
இந்த பணத்தை மாற்றித்தருமாறு, கலெக்டரிடம் நான்கு முறை புகார் மனு கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

என் கணவர் சில ஆண்டுகளுக்கு முன், இறந்து விட்டார். எனது ஒரே வாரிசான மகனும் இறந்து விட்டார். எந்த ஆதரவும் இல்லாமல் இருக்கும் எனக்கு, இந்த பணத்தை மாற்றி கொடுத்தால் உதவியாக இருக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

உடனே, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்த கலெக்டர், ஏழை பாட்டிக்கு தகுந்த உதவிகளை செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து, வங்கி மேலாளர்கள் பாட்டியிடம் பல்வேறு தகவல்களை கேட்டு பெற்றனர். ஆவண செய்வதாக உறுதியளித்தனர்.

1