மேட்டுப்பாளையம்; ‘ஆப்பரேஷன் டிரக் ப்ரீ கோவை’ வாயிலாக, 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 48 வழக்குகளில் 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆன்லைனில் போதைப் பொருள் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.போதைப் பொருள் புழக்கம் இல்லாத கோவை மாவட்டத்தை உருவாக்கும் வகையில், ரூரல் எஸ்.பி., கார்த்திகேயன் உத்தரவின்படி, ‘ஆப்ரேஷன் டிரக் ப்ரீ கோவை’ என்ற தலைப்பில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தொடர் சோதனைகளை போலீசார் நடத்தினர். இதற்காக, 300 பேர் கொண்ட, 89 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் வீடுகள், போதைப் பொருள் பயன்படுத்துபவர்கள் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகள், விடுதிகள், பொது இடங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில், 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடமிருந்து நடத்திய விசாரணை அடிப்படையில் இந்த சோதனை தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மேட்டுப்பாளையத்தில் நடத்தப்பட்ட சோதனையில், 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோன்று கடந்த ஜூன் 13- முதல் தற்போது வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 48 வழக்குகளில், 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உறுதிமொழி
மேட்டுப்பாளையம் போலீசார் கூறியதாவது:- போதைப் பொருள் பயன்பாட்டினால் அவர்களது வாழ்வு மட்டும் இல்லாமல், அவர்களை சுற்றி இருப்பவர்களின் வாழ்வும் துன்பத்திற்கு தள்ளப்படுகிறது.
போதைப் பொருள் பயன்படுத்தும் நபர்கள், விற்பனை செய்பவர்கள் என அனைவரையுமே கண்காணித்து தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். ‘போதைப் பொருளை, நான் பயன்படுத்தமாட்டேன்; என்னை சுற்றி உள்ளவர்களையும் பயன்படுத்த விட மாட்டேன்’ என்ற இந்த உறுதிமொழியை அனைவருமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
போதைப் பொருள் விற்பனை தொடர்பாக தகவல் கிடைத்தால், பொதுமக்கள் தாராளமாக மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
கடும் நடவடிக்கை
மாவட்ட எல்லையில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளோம். வட மாநிலங்களில் இருந்து கஞ்சா இங்கு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவதால், வட மாநில தொழிலாளர்களின் குடியிருப்புகள், வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக போதைப்பொருள் வாங்கி உபயோகப்படுத்தினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.
Leave a Reply