கோவை; கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில், கடத்தல் வழக்கில் கைப்பற்றப்பட்ட, 5,600 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது.போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு சட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டு, கோர்ட்டில் ஒப்படைக்கப்படுகிறது.
வழக்கு முடியும் வரை, போதை பொருட்கள் நீதிமன்ற ஆவண பாதுகாப்பு அறையில் வைக்கப்படுகிறது. தீர்ப்புக்கு பிறகும் கஞ்சாவை அழிக்க போலீசார் முயற்சி எடுப்பதில்லை.
இதனால், 20 ஆண்டுகளுக்கு முன் கைப்பற்றப்பட்ட கஞ்சா மூட்டைகள், நீதிமன்றத்தில் தேங்கின. இதுகுறித்து சென்னை ஐகோர்ட் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

அழித்து விடலாம்
ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவில், ‘போதை பொருள் கடத்தல் வழக்குகளில், மாஜிஸ்திரேட் முன்னிலையில் மாதிரி எடுத்து ஆய்வுக்கு அனுப்பி, முடிவு வந்ததும், அதற்கான ஆவணத்தை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும்.
அதைத்தொடர்ந்து, கோவை இன்றியமையா பொருட்கள் தடுப்பு சட்ட நீதிமன்ற(இ.சி., கோர்ட்) ஆவண பாதுகாப்பு அறையில், வைக்கப்பட்டிருந்த கஞ்சா மூட்டைகளை எடுத்துச் சென்று அழிக்க, நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து கஞ்சா மூட்டைகள், போதை பொருள் அழிப்பு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன. அக்குழுவினர், செட்டிபாளையம் எடுத்துச் சென்று அழித்தனர். எட்டு பைக்குகள், ஏழு நான்கு சக்கர வாகனங்களும், போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
நான்கு மாவட்ட கஞ்சா!
கோவை மாவட்டத்தில், 51 போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் போதை பொருள் தடுப்பு சிறப்பு பிரிவில் பதிவான, 650 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 4,075 கிலோ கஞ்சா, திருப்பூர் மாவட்டத்தில் பதிவான, 311 வழக்கில் கைப்பற்றிய, 811 கிலோ கஞ்சா, நீலகிரியில் பதிவான, 49 வழக்கில் கைப்பற்றிய 104 கிலோ கஞ்சா, ஈரோடு மாவட்டத்தில் பதிவான 143 வழக்கில் கைப்பற்றிய, 651 கிலோ கஞ்சா உள்பட மொத்தம், 1,153 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட, 5,600 கிலோ கஞ்சா அழிக்கப்பட்டது.
‘வாசனையால் பாதிப்பு’
இ.சி., கோர்ட் அரசு தரப்பு சிறப்பு வக்கீல் சிவகுமார் கூறுகையில், ”கடத்தல் வழக்கில் கைப்பற்றிய கஞ்சா உள்ளிட்ட பொருட்கள், பல ஆண்டுகள் தேங்கிக் கிடக்கின்றன. பாதுகாக்க இடம் இல்லை. கஞ்சா வைத்துள்ள கட்டடத்தில், அதன் வாசனை பலருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஐகோர்ட் உத்தரவுப்படி, கஞ்சா மூட்டைகள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவற்றை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார்.
Leave a Reply