கோவை; கடந்த நான்கரை ஆண்டுகளாக, பயன்பாட்டிலுள்ள பி.எஸ்.6 ரக வாகனங்களால் கரும்புகை வெளியேறாமல் தடுக்கப்பட்டு, சுற்றுச்சூழல் மாசடைவதும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.’பாரத் ஸ்டேஜ் 6′ வாகனங்களே, பி.எஸ்.6 வாகனங்கள் என அழைக்கப்படுகின்றன. வாகனங்கள் கக்கும் புகையை கட்டுப்படுத்தும் வகையில், 2020 ஏப்., முதல்விற்பனையாகிறது.
பி.எஸ்.6 என்பது, பாரத் ஸ்டேஜ் 6 என்பதன் சுருக்கமாகும். இந்த ரக வாகனங்கள் வெளியிடும் நைட்ரஜன் ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற தீங்கு விளைவிக்கும் வாயுக்களை கட்டுப்படுத்துகிறது.
வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டைக் குறைக்கவும் உதவுகிறது. காற்று மாசை குறைப்பதன் மூலம் மக்களின் உடல்நலத்துக்கும், பாதுகாப்பானதாக அமைந்துள்ளது.
பி.எஸ்.6 வாகனங்கள், மேம்படுத்தப்பட்ட எரிபொருள் அமைப்பு மற்றும் உமிழ்வு கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே உள்ள பி.எஸ்.4 வாகனங்களை பயன்படுத்தலாம். ஆனால் புதியதாக உற்பத்தியோ வாகனப்பதிவோ செய்யக்கூடாது. பி.எஸ்.6 வாகனங்கள், சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்களாகும். இது ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், சிறிய மற்றும் கன ரக சரக்குவாகனங்கள் என்று அனைத்துக்கும் பொருந்தும்.
மோட்டார் வாகன ஆய்வாளர் செல்வதீபா கூறியதாவது:பி.எஸ்.6 வாகனங்களை இயக்கும் போது, நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட பொருட்கள் மாசு ஏற்படாமல் கண்காணித்து தடுக்கிறது. இதை கண்காணிக்க, ஆன்போர்டு டயக்னாஸ்டிக்ஸ் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமில மழைக்குக் காரணம், ஹைட்ரோகார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடு ஆகியவற்றின் கலவையான நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகும். பெட்ரோல் மூலம் இயங்கும் வாகனங்களில்
ஹைட்ரோகார்பன்கள் மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகளின் வெளியேற்றத்தை பி.எஸ்.6 வாகனங்களில் கி.மீ.,க்கு, 0.18 கிராமிலிருந்து, 0.16 கிராம் ஆகக் குறைத்துள்ளது.
அதுவே டீசல் வாகனங்களுக்கு, 0.30 கிராமிலிருந்து, 0.17 கிராமாக குறைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. நைட்ரஜன் ஆக்சைடு அளவு டீசலுக்கு 70 சதவீதம் ஆகவும், பெட்ரோலுக்கு 25 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
புகையிலிருந்து வெளியேறும், நுண்ணிய துகள்கள் மாசு ஏற்படுத்துபவை. இவை டீசல் வாகனங்களில் கி.மீ.,க்கு 0.025 கிராமிலிருந்து, 0.0045 கிராம் ஆக குறைந்துள்ளது.
அதே சமயம், ஒரு மில்லியனுக்கு 50 பாகங்கள் ஆக இருந்த, வெளியேறும் சல்பரின் அளவு, 10 ஆக குறைந்துள்ளது. நைட்ரஸ் ஆக்சைடு உமிழ்வு, 0.25 கிராமாக இருந்தது. இது, 0.06 ஆக குறைந்துள்ளது.
Leave a Reply