மாநகராட்சி பள்ளிகளில் 160 தற்காலிக ஆசிரியர்கள்; தடைபடாமல் ‘ஜம்மென்று’ நடக்கும் கற்பித்தல் பணி

கோவை; மாநகராட்சி பள்ளிகளில், 160 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், காலிப்பணியிடங்களை அந்தந்த தலைமை ஆசிரியர்களே, நிரப்ப அனுமதிக்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ், 83 ஆரம்பப் பள்ளிகள், 37 நடுநிலை, 11 உயர்நிலை, 17 மேல்நிலை என, 148 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகம், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் போன்ற நடவடிக்கைகளை, மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.

ஆசிரியர் காலிப்பணியிடங்கள், பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக(எஸ்.எம்.சி.,) வெளிமுகமை முறையில் நியமிக்கப்படுகிறது. அதன்படி, மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், 47 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் என்பது, கல்வித் தரத்தை மேம்படுத்தும்.

ஆர்.எஸ்.புரம், மாநகராட்சி இருபாலர் பள்ளியில் தமிழ், உயிரியல் பாடத்துக்கு தலா ஒருவர், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்(மேற்கு) தமிழ், பொருளியல், கணினி பயன்பாடு பாடங்களுக்கு தலா ஒருவர், வணிகவியல் பாடத்துக்கு மூவர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு, 15 மேல்நிலை பள்ளிகளில், ஆங்கிலம், புவியியல், கணினி அறிவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு, 47 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும் நியமிக்கப்படுகின்றனர்.

அதன்படி, வி.எச்.ரோடு, மாநகராட்சி சிட்டி மேல்நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம் உயர்நிலைப் பள்ளி, மணியகாரன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி என, 34 பள்ளிகளில், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு, 51 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்படுகின்றனர்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஒருவருக்கு மாதம் ரூ.18 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15 ஆயிரமும் தற்காலிகமாக மதிப்பூதியம் அடிப்படையில் வழங்கப்படுகிறது.

மாநகராட்சி ஆரம்ப, நடுநிலை என, 52 பள்ளிகளில், இடைநிலை, தலைமை ஆசிரியர்கள், 62 பேர் தலா ரூ.12 ஆயிரம் மதிப்பூதியத்திலும் நியமிக்கப்பட்டுள்ளனர். மாநகராட்சி கல்வி நிதியில் இருந்து இவர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படுகிறது.

நிரப்பிக்கொள்ளலாம்!

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர் காலிப்பணியிடங்களை அந்த தலைமை ஆசிரியர்கள், எஸ்.எம்.சி., வாயிலாக நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதன்படி, தற்போது, 160 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

– தாம்ப்சன், மாநகராட்சி கல்வி அலுவலர்.