கோவை : அரசு பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் அடைவை உயர்த்தும் நோக்கில், கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 3, 5, 8ம் வகுப்புகளில் மாணவர்களின் கற்றல் நிலையை மதிப்பீடு செய்ய, தமிழ், ஆங்கிலம், கணிதம், எட்டாம் வகுப்பிற்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஓ.எம்.ஆர். முறையில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
இத்தேர்வுகளில், கோவை மாவட்டம் 48.24 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் கடைசி இடத்தையே பிடித்தது.
இதையடுத்து, மாவட்டம் முழுவதும் மாணவர்களின் கற்றல் நிலையை மேம்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பாடங்கள் முடிந்தவுடன் வகுப்பறைகளில் மாணவர்களின் கற்றல் நிலையை ஆசிரியர்கள் நேரடியாக மதிப்பீடு செய்ய வேண்டும்; தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை மதிப்பீட்டு நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், இரண்டு வட்டாரங்களுக்கு ஒரு கல்வி அலுவலர்கள் ஆகியோர் இச்செயல்பாடுகளை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, மாணவர்களின் கற்றல் திறன் வெளிப்பாட்டை மேம்படுத்தும் வகையில், வினாத்தாள் தயாரிப்பு மற்றும் வழிகாட்டி பயிற்சி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரி கூறுகையில், ‘ஒவ்வொரு ஒன்றியத்தில் இருந்தும் நான்கு ஆசிரியர்கள் என்ற விகிதத்தில், 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பயிற்சியில் பங்கேற்றனர். மூன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் அடைவு திறனை மேம்படுத்த, எவ்வாறு வழிகாட்டுவது என்ற பயிற்சி நடைபெற்றது’ என்றார்.
Leave a Reply