நாங்க இருக்கோம்… கவலைப்படாதே! பிள்ளைகளுக்கு நம்பிக்கை குடுங்க பெற்றோரே

ரிதன்யா!


கடந்த சில நாட்களாக, அனைத்து இடங்களிலும் வேதனையுடன் முணுமுணுக்கப்பட்ட பெயர். நல்ல படிப்பு, அழகு, வசதி அனைத்தும் இருந்தும், ஏன் இந்த முடிவு என அங்கலாய்க்காதவர்கள் இல்லை… இறுதியாக பேசியதிலும் அவ்வளவு தெளிவு. என்ன பயன்!

பொதுவாகவே திருமணம் ஆகி செல்லும் பெண்கள், பல கஷ்டங்களை பெற்றோரிடம் ஆழமாக பகிர்ந்து கொள்வதில்லை. இதற்கு காரணம், பெற்றோர் கஷ்டப்பட கூடாது; சுற்றத்தார் முன் அவமானப்பட்டு விடக்கூடாதே என்பதுதான்.

பெண் பிள்ளைகளை பெற்ற பெண்கள் சற்று கவனமுடனும், ஆண் பிள்ளையை பெற்ற பெற்றோர் பொறுப்புடனும் இருக்க வேண்டும் என கூறுகிறார், ‘பேரன்டிங் கோச்’ மற்றும் மனநல ஆலோசகர் தீபா மோகன்ராஜ்.

அவர் நம்மிடம் கூறியதிலிருந்து…

திருமணத்திற்கு முன் பெற்றோர், பிள்ளைகளுடன் அமர்ந்து பேசுங்கள். அவர்களின் மனநிலை, விருப்பம் என்ன என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஏதேனும் ஒரு இடத்தில், மணமகன் செயல்பாடு பிடிக்கவில்லை, பேசுவது பிடிக்கவில்லை என பெண்கள் கூறினால், சற்று அதில் கவனம் செலுத்துங்கள். வசதியை மட்டும் பார்த்து முடிவு எடுத்து விடாதீர்கள்.n சூழல் எதுவானாலும், தவறு உன் மீதே இருந்தாலும், தயக்கமின்றி என்னிடம் வா என்ற நம்பிக்கையை பெற்றோர் இருவரும், வெளிப்படையாகவே கூறுங்கள்.
திருமணத்திற்கு பின் பெண் வேலைக்கு செல்லக்கூடாது, பணம் வேண்டும் என்ற அதிக கெடுபிடி செய்யும் சம்மந்தங்களை வசதிக்காக ஒத்துக்கொண்டு வேதனைப்பட வேண்டாம். பெண் விரும்பினால் திருமணம் முடிந்து படிப்பாள்; வேலைக்கு செல்வாள் அல்லது தொழில்முனைவோராக இருப்பாள் என்பதை தெளிவாக கூறிவிடுங்கள்.

உயர்கல்வி முடித்தவுடன் திருமணத்தை செய்துவிடாமல், இரண்டு ஆண்டுகளாவது வேலைக்கு அனுப்புங்கள். முடிந்தால் வெளியூரில் வேலைக்கு அனுப்புங்கள்; அங்கு கிடைக்கும் அனுபவங்கள் உலகை புரிந்துகொள்ளவும், சுயமாக முடிவு எடுக்கவும் மனநிலையை தரும்.

திருமணம் தான் வாழ்க்கை என்பதை திணிக்காமல், அவர்களின் முடிவுகளுக்கு மதிப்பளியுங்கள். சுற்றத்தார் எப்போதும் குறை கூறுவர்; அவர்களின் கருத்துக்களை புறம் தள்ளி பிள்ளைகளின் உணர்வுக்கு முன்னுரிமை கொடுங்கள்.

பெண் பிள்ளைக்கு மட்டுமல்ல, ஆண் பிள்ளைக்கும் சமையல் கற்றுக்கொடுங்கள். மாறும் சமூகத்தில், வசதிகள் கொட்டிக்கிடந்தாலும் திறமையும், வேலை பகிர்வு முக்கியம் என்பதை உணர்த்துங்கள்.

திருமணம் முன் வரை தந்தை, பின்னர் கணவர் தான் உன் துணை என்ற பஞ்சாங்கத்தை நிறுத்தி, யாரையும் சாராமல் சிறகை விரித்து பறக்கும் தைரியத்தை கற்றுக்கொடுங்கள்,

அனைத்திற்கும் எல்லை உண்டு; அதை தாண்டும் போது, உதறி செல்லும் துணிவையும் சொல்லிக் கொடுங்கள்.