தலைமை இல்லாமல் தடுமாறுது ஆவின்! இரண்டு ஆண்டுகளாக நிர்வாகப் பணிகள் ஸ்தம்பிப்பு

கோவை; கோவை ஆவின் நிறுவனம், எட்டு மாதங்களாக பொறுப்பு மேலாளரின் கட்டுப்பாட்டில் செயல்படுவதால், நிர்வாக ரீதியாக குழப்பங்கள் ஏற்பட்டு, பணிகள் ஸ்தம்பித்துள்ளன.கோவை ஆவின் நிறுவனம் நாளொன்றுக்கு சராசரியாக, 2.20 லட்சம் லிட்டர் பால் விற்பனை செய்கிறது. உபபொருட்களாக நெய், பால்கோவா, மைசூர்பா, பாதாம் பவுடர், தயிர், நறுமண பால், வெண்ணெய், காஜுகத்லீ, மோர் மற்றும் லஸ்ஸி ஆகியவையும் விற்பனையாகின்றன.

உற்பத்தியாளர்களிடம் இருந்து நாளொன்றுக்கு, 1.83 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பச்சாபாளையம், சண்முகாபுரம் மற்றும் சுல்தான்பேட்டை ஆகிய இடங்களில் பால் பண்ணை செயல்படுகிறது. பால் குளிர் பதன நிலையங்கள், தொகுப்பு பால் குளிர்விப்பு மையங்கள் செயல்படுகின்றன இவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு ஆவின் பொது மேலாளரை சேர்ந்தது.

ஆவின் நிறுவன பால் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள், முகவர்களுக்கு பணம் வழங்குதல் மற்றும் பெறுதல், பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பயன் வழங்காமல் நிலுவை வைத்திருப்பது என, ஏராளமான நிர்வாக குளறுபடிகளால், பணிகள் ஸ்தம்பித்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆவின் பணியாளர்கள் கூறியதாவது:

பொது மேலாளர் ராமநாதன் ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளாகிறது. ஜெயராமன், பாலபூபதி ஆகியோர் சில மாதங்களே பணியில் இருந்தனர். இதன் பின், பொது மேலாளர் நியமிக்கவில்லை. நாமக்கல் மாவட்ட பொது மேலாளர் சண்முகம் கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். மாதத்துக்கு இரண்டு முறை மட்டுமே வந்து செல்கிறார். அவருக்கு பதிலாக டி.ஜி.எம்., ராஜேந்திரன் கவனித்து வருகிறார்.

பால் உற்பத்தியாளருக்கு சரியான நேரத்துக்கு, பணப்பட்டுவாடா செய்வதில்லை. வாகனங்களில் பால் பாக்கெட்டுகளை கொண்டு போய் சேர்ப்பவர்களுக்கும் அதே நிலை. ஓய்வு பெற்ற பணியாளர்கள் பணப்பயன் வழங்காமல் இழுத்தடிக்கப்படுகின்றனர். போதுமான பணியாளர்கள் இல்லாததால், பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

‘சிறப்பாக செயல்படுது’

பொது மேலாளர் (பொ) சண்முகம் கூறுகையில், ”பால் உற்பத்தியாளர்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை பணம் வழங்கப்படுகிறது; நிலுவை வைப்பதில்லை. கோர்ட்டில் வழக்கு நிலுவை இருந்ததால், ஓய்வு பெற்றவர்களுக்கு பணம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குளறுபடிகளோ, பணி ஸ்தம்பிப்போஇல்லை. சிறப்பாக செயல்படுகிறது,” என்றார்.